Published : 02 Sep 2019 11:23 AM
Last Updated : 02 Sep 2019 11:23 AM

பேட் பிடிக்க முடிந்த கையால் வாள் பிடிக்கவும் முடியும் - பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் பேச்சு

’பேட் பிடிக்க முடிந்த கையால் வாள் பிடிக்க முடியாதா?’ என்று ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது.

ஆனால், பாகிஸ்தானுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை, இதனால் ஐ.நா.வில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச எல்லைப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் படைகளையும், போர்விமானங்களையும் பாகிஸ்தான் அரசு நிறுத்திவருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தயாராக இருந்து வருகிறது

இந்த சூழலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் இந்தியாவுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துக்களைக் கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து கொண்டு கையில் வாளை ஏந்தியபடி, ”காஷ்மீர் சகோதரர்கள் கவலைப்படவேண்டாம். சிக்ஸர் அடிக்க பேட் பிடிக்க முடிந்த என்னால, வாள் பிடிக்க முடியாதா? நான் என்னுடைய பேட்டால் சிக்ஸர்களை அடித்திருக்கிறேன். இப்போது என்னுடைய வாளால் மனிதர்களைக் கொல்வேன்” என்றார்.

சர்ச்சைக்குரிய வகையில் ஜாவேத் மியாண்டட் பேசும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாவேத் மியாண்டட் இவ்வாறு பேசுவது இது முதன்முறையல்ல. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருந்த தருணத்தில் பாகிஸ்தான் அரசு அணு ஆயுதங்களை சும்மா வைத்திருக்கவில்லை, இந்தியாவுக்காகத்தான் வைத்திருக்கிறது என்று பேசி சர்ச்சையை கிளப்பினார் ஜாவேத் மியாண்டட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x