

எஸ்.முஹம்மது ராஃபி
ராமேசுவரம்
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயில் ராஜகோபுரத்தில் மகாத்மா காந்தி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை அருகே வல்லிபுரத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை வல்லிபுர ஆழ்வார் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இலங்கையில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் நிறைய உள்ளன. இருப்பினும் பாடல் பெற்ற ஸ்தலம், மூர்த்தி ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக வல்லிபுர ஆழ்வார் கோயில் விளங்குகிறது.
முன்னொரு காலத்தில் இப் பகுதியில் வல்லி நாச்சியார் என்ற பெண் இருந்தாராம். அவர் படகில் சென்று கொண்டிருந்தபோது, அவரது மடியில் மீன் ஒன்று துள்ளி விழுந்தது. பின்னர் அந்த மீன் ஸ்ரீ சக்கரம் ஒன்றை வல்லி நாச்சி யாரிடம் கொடுத்து விட்டு கடலில் துள்ளிக்குதித்து மறைந்ததாம். வல்லி நாச்சியார் அச்சக்கரத்தை வழிபட்டு வந்தாராம். பின்னர் அப்பகுதியில் ஆலயம் அமைக்கப் பட்டு இன்றும் வழிபட்டு வருவதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
பொதுவாக விஷ்ணு ஆலயங் களில் மூலவர் மூர்த்தி நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத் திலோ, கிடந்த கோலத்திலோ காணப்படுவார். ஆனால், இந்த கோயிலின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம்தான் இன்றும் உள்ளது. இக்கோயில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு தருணங்களில் புனரமைக்கப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்குச் செல்லும்போது முதலில் தெரிவது ராஜ கோபுரம். இக்கோபுரத்துக்கு 1980-ம் ஆண்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. ராஜ கோபுரம் 71 அடி உயரமும், 7 தளங்களையும் கொண்டது. ராஜ கோபுரத்தை தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன், சிதம்பரம், சுந்தரம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கட்டியுள்ளனர். இதனால் திராவிட கட்டிடப் பாணியில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.
இந்த கோயில் கோபுரத்தில் 4 பக்கங்களிலும் ராமர், லட்சுமணர், சீதை, மன்மதன், ரதி கண்ணன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சிலை களுடன் மகாத்மா காந்தி சிலை களும் அமைக்கப்பட்டுள்ளன.
காந்தியின் வருகை
இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கூறியதாவது: 1924-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாத்மா காந்தி தேர்வு செய்யப்பட்டார். காந்தி தலைமையேற்றதும் காங்கிர ஸில் பல மாற்றங்களை செய்தார். பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தார். 1927-ம் ஆண்டு இலங் கைக்கு சென்றார். அப்போது நவம்பர் 26 முதல் 29 வரை யாழ்ப் பாணத்தில் தங்கி இருந்தார்.
அந்த தருணத்தில் வல்லிபுர ஆழ்வார் கோயிலில் உரை நிகழ்த்தி னார். அதன் நினைவாக இக்கோயில் ராஜகோபுரத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கதர் ஆடை அணிந்து கையில் தடியுடன் கூடிய முழு உருவச் சிலையும், ராட்டையில் நூற்பது போன்ற ஒரு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.