

மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் அகதியாக வந்த ஈழத் தமிழர் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களுக்கு ஆதரவாகவும் ஆஸ்திரேலியா முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தினர்.
ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா, இருவரின் குழந்தைகளான 4 வயது கோபிகா, 2 வயது தருணிகா ஆகியோரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், அவர்களைத் தங்கவிடாமல் ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமாக இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமுக்கு தமிழ்க் குடும்பத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், நடேசலிங்கம் குடும்பத்தினர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில்தான் குடியிருக்க வேண்டும். அவர்களை இலங்கைக்கோ அல்லது கிறிஸ்துமஸ் தீவுக்கோ அனுப்பக் கூடாது எனக் கோரி அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள்.
முன்கதை
இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழர் நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா. இருவரும் கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டில் தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக வந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தனர்.
இதில் நடேசலிங்கத்துக்கும் பிரியாவுக்கும், ஆஸ்திரேலியாவில் இரு பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகளான கோபிகாவுக்கு 4 வயதும், 2-வது மகளான தருணிகாவுக்கு 2 வயதும் தற்போது ஆகிறது.
இந்நிலையில், இந்த ஈழத் தமிழ்க் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தற்காலிகமான விசா காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு முடிவு செய்தது கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது
இதையடுத்து மெல்போர்ன் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து நடேசன் குடும்பத்தை விமானம் மூலம் இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசு அனுப்பி வைத்தது. இலங்கையில் பிறந்த நடேசலிங்கத்துக்கும், அவரின் மனைவி பிரியாவுக்கும் மட்டுமே குடியுரிமை இருக்கிறது.
ஆனால், ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் இரு குழந்தைகளான கோபிகா, தருணிகா இருவருக்கும் இலங்கை அரசு குடியுரிமை வழங்காது, ஆஸ்திரேலய அரசும் குடியுரிமை வழங்காது.
இலங்கைக்கு தங்கள் பெற்றோருடன் சென்றாலும் இந்த இரு குழந்தைகளும் நாடற்றவர்களாகவே இருக்க வேண்டி வரும் என்ற சூழல் இருந்தது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இரவு முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹீதர் ரிலே ஈழத் தமிழர் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பத் தடை விதித்தார். ஆனால், அவர் இந்த உத்தரவு பிறப்பிக்கும் போது, விமானம் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை விட்டு இலங்கை நோக்கி புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து நீதிபதி ஹீதரிடம் அதிகாரிகள் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், நீதிபதி ஹீதர் அதற்குச் சம்மதிக்காமல் விமான நிலையத்துக்கு தொலைபேசியில் பேசி விமானத்தை உடனடியாக தரையிறங்க உத்தரவிட்டார். அதன்பின் தரையிறங்கிய விமானத்தில் இருந்து நடேசன் குடும்பத்தினர் கீழே இறக்கி விடப்பட்டு, மெல்போர்ன் நகரில் தங்கவைக்கப்பட்டனர்.
இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடேசலிங்கம் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தத் தடை விதித்தது. ஆனால், வெளியுறவு மற்றும் குடியேற்றக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் ஆஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு, நடேசலிங்கத்தின் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பத் தீவிரமாக இருந்து வருகிறது.
பேரணி
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பத்தை மெல்போர்ன் நகரில் தங்க வைக்காமல் அவர்களை அகதிகள் அடைத்து வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் தீவுக்கு ஆஸ்திரேலிய அரசுஅனுப்பியது. இதைக் கண்டித்தும், தமிழ்க் குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ வகை செய்ய வலியுறுத்தியும் மெல்போர்ன், சிட்னி, கான்பெரேரா, அடிலெய்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பதாகைகளை ஏந்தி இன்று பேரணியாகச் சென்றனர்.
"டிவிங்கிள், டிவிங்கிள் லிட்டல் ஸ்டார்" என்ற பாடலைக் பாடிக்கொண்டும், "குழந்தைகளுக்குக் குடியுரிமை தராத ஆஸ்திரேலிய அரசுக்கு வெட்கக்கேடு" என்ற கோஷங்களை எழுப்பியும் மக்கள் பேரணியாகச் சென்றனர்.
தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோனி அல்பானிஸ் தமிழ்க் குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் தங்கவைப்பது தொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் கூறுகையில், " தமிழக் குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் தங்கவைக்க அனுமதிக்க வேண்டும். அரசின் குடியேற்றக் கொள்கைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நான் கூறுவதெல்லாம், மக்கள் என்ன சொல்கிறார்கள், கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள்" எனத் தெரிவித்தார்.
கிரீன்ஸ் தலைவர் ரிச்சார்ட் டி நாடலே கூறுகையில், " ஆஸ்திரேலியாவில் தமிழ்க் குடும்பத்தைத் தங்க வைக்காமல் கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றது, அறிவற்ற கொடூரம். இந்தக் கொடூரம் முடிவுக்கு வர வேண்டியது அவசியம்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ