Published : 01 Sep 2019 03:21 PM
Last Updated : 01 Sep 2019 03:21 PM

சிரியாவில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: 40 ஜிகாதி தலைவர்கள் பலி

இட்லிப் (சிரியா),

சிரியாவில் ஜிகாதி தலைவர்கள் ஒன்றாகத் திரண்டிருந்த முகாம் ஒன்றில் பென்டகன் குண்டு வீசித் தாக்கியதில் 40 தலைவர்கள் ஒரே இடத்தில் பலியானதாக மனித உரிமை கண்காணிப்பு ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த 8 ஆண்டுகாலமாக நடந்துவரும் போர் கிட்டத்தட்ட ஒரு சமாதானத்தை நோக்கிச் செல்லும் வகையில் நேற்று சமாதான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தை வர்ணித்த ஐ.நா. ''ஒரு கொடுங்கனவிலிருந்து மீளும் மனிதாபிமான முயற்சி'' என்று பாராட்டியது. ஆனால், அதற்கு அடுத்த சில மணிநேரங்களிலேயே அது பொய்க்கும்விதமாக சிரியா ஒரு மோசமான தாக்குதலைச் சந்தித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் பென்டகனும் ஒப்புக்கொண்டுள்ளது.

சிரியாவில் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல்களில் இதுவரை 3,70,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் 4 லட்சம் மக்களை தாங்கள் வாழ்ந்த சொந்த நாட்டைவிட்டு விட்டியடித்துள்ளது. அரசு ராணுவத்தின் முயற்சியில் 60 சதவீத நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தி வைத்துள்ள சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், இட்லிப் உட்பட நாட்டின் பிற பகுதிகளை மீட்டெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், ஆகஸ்ட் 1 முதல் சிரிய ஆட்சிக்கும் ஜிகாதிகளுக்கும் இடையிலான இரண்டாவது சமாதான ஒப்பந்தம் நேற்று அமலுக்கு வந்தது.

நான்கு மாத கால பயங்கர குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஜிகாதிகள் அரசும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. ஜிகாதி அரசின் கீழ் உள்ள இட்லிப் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவுப் படைகள் இணைந்த சிரிய அரசாங்கத்தின் வான்வழித் தாக்குதல்கள் சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டன.

நேற்று மாலை நடந்த அமெரிக்காவின் தாக்குதல் குறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பு ஆய்வகத்தின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறியதாவது:

''நேற்று இட்லிப் மாகாணத்தில் புதுப்பிக்கப்பட்ட சிரிய ஆட்சியில் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சில மணிநேரங்களிலேயே பொதுமக்களைச் சேர்ந்த ஒருவரைக் குண்டுவீசி தாக்கிக் கொன்றதின் மூலம் ரஷ்ய ஆதரவுப்படைகள் முதல் மீறலைச் செய்தது.

இதன் தொடர்ச்சியாகவே மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இட்லிப் நகரத்திற்கு அருகில் ஜிகாதி தலைவர்கள் ஒரு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஹுர்ராஸ் அல்-தீன், அன்சார் அல் தவ்ஹீத் மற்ற கூட்டணி குழுக்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தைக் குறிவைத்து அமெரிக்கா ஏவுகணை மூலம் குண்டுவீசியதில் 40 பேர் பலியாகினர்''.

இவ்வாறு அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பென்டகன் சிரியாவில் அல்கொய்தா (AQ-S) தலைவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பதினொரு ஒருங்கிணைந்த போர் கட்டளைகளில் ஒன்றான அமெரிக்காவின் மத்திய கட்டளை (CENTCOM) இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி ஜிகாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏவுகணைத் தாக்குதலா தரைவழித் தாக்குலா, என்ன வகையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது அதில் தெரிவிக்கப்படவில்லை.

"அமெரிக்க குடிமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் தருபவர்களாக அல்கொய்தா தலைவர்கள் இருந்துவருகிறார்கள். எங்கள் நட்பு நாடுகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்திற்கும் அவர்களே பொறுப்பு. எதிர்காலத்தில் அவர்கள் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தாமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உள்ளது. பிராந்தியத்தைச் சீர்குலைக்கும் வகையில் அவர்கள் பெற்றுள்ள வசதிகளை அவர்களது திறனை அழிக்கும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x