Published : 01 Sep 2019 12:51 PM
Last Updated : 01 Sep 2019 12:51 PM

வங்கதேசத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: அமைச்சருக்கு குறிவைத்த குண்டுவெடிப்பில் இரண்டு போலீஸார் காயம்

டாக்கா,

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வங்கதேசத்தில் அமைச்சரைக் குறிவைத்து டாக்காவில் நடத்தியுள்ள வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச அமைச்சரின் கார் அருகே நடந்த இந்தக் குண்டுவெடிப்பில் இரண்டு போலீஸார் காயமடைந்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டாக்காவில் நேற்று (சனிக்கிழமை) இரவு சயின்ஸ் லேப் சந்திப்பில், அந்தப் பகுதி வழியாக அமைச்சரின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது நடைபாதையில் இருந்து குண்டு வீசப்பட்டது. அமைச்சரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸார் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ஏபி ஷஹாபுதீன் கூறுகையில், "அமைச்சரின் பாதுகாப்புக் குழுவில் ஆறு போலீஸார் இருந்தனர். வங்கதேச எல்லைக் காவலர் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்கு அமைச்சர் சென்று கொண்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புப் படையில் நானும் இருந்தேன். நாங்கள் அறிவியல் ஆய்வகச் சந்திப்பில் போக்குவரத்து எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டோம். அமைச்சர் செல்வதற்காக வழியை ஒழுங்குபடுத்த நான் எஸ்கார்ட் வாகனத்திலிருந்து இறங்கிச் செல்லும்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது'' என்றார்.

இந்தக் குண்டுவெடிப்பில் போக்குவரத்துக் காவலர் அமினுல் இஸ்லாமும் காயமடைந்தார். அமினுலின் வலது கை விரல்களில் படுகாயங்கள் ஏற்பட்டிருந்தன. காவல் உதவி ஆய்வாளர் ஷாஹாபுதீனின் கால்களில் காயங்கள் ஏற்பட்டதோடு அவருடைய ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்ட போலீஸார் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

"இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்துவருகிறது" என்று டாக்கா பெருநகர காவல்துறை ஆணையர் அசாதுஸ்மான் மியா தெரிவித்தார்.

ஐஎஸ் பொறுப்பேற்பு

குண்டுவெடிப்பு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க எஸ்ஐடிஇ புலனாய்வுக் குழு, தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாதக்குழு பொறுப்பேற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x