Published : 01 Sep 2019 11:08 AM
Last Updated : 01 Sep 2019 11:08 AM

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் சுட்டுக்கொலை, 21 பேர் காயம்: காரைக் கடத்திய இளைஞர் வெறிச்செயல்

ஹாஸ்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தபால் நிலைய வாகனத்தைக் கடத்தி சாலையில் செல்வோரைத் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமடைந்தனர்.

போலீஸார் அந்த வாகனத்தை மறித்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இந்த வாகனத்தில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த இளைஞர் யார், எதற்காகச் சுட்டார் என்ற விவரங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் விவரங்களையும் போலீஸார் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஒடிசா நகரில் உள்ள புறநகரான மிட்லாண்டில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடந்தது. அமெரிக்காவில் வரும் 2-ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், போலீஸார் எளிதாக அந்த நபரைச் சுட்டு வீழ்த்தினர்.

இதுகுறித்து ஒடிசா நகர போலீஸ் பிரிவின் தலைவர் மைக்கேல் கிரேக் கூறுகையில், "ஒடிசா நகரின் சினர்ஜி திரையரங்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த தபால் நிலையத்தின் வாகனத்தை நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஒரு மர்ம நபர் திருடிச் சென்றார். அந்த வாகனத்தை ஓட்டிய மனிதர் சாலையில் சென்ற மக்கள் மீது தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரெனச் சுடத் தொடங்கினார்.

இதைத் தடுக்க முயன்ற இரு போலீஸார் மீதும் அந்த மனிதர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார். காயம் அடைந்த போலீஸார் அளித்த தகவலின் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர்

மேலும், சாலையில் மக்கள் நடமாடாமல், கடைகளுக்குள், வீட்டுக்குள் இருக்குமாறு உடனடியாக அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், வாகனத்தில் சென்றுகொண்டே அந்த நபர் பலர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த இளைஞர் கடத்திச் சென்ற வாகனத்தை போலீஸார் துரத்திச் சென்றபோது, மற்றொரு வாகனத்தின் மீது மோதி அந்த வாகனம் கவிழ்ந்தது. அப்போது போலீஸாரை நோக்கிச் சுட முயன்ற அந்த இளைஞரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். அந்த இளைஞர் பெயர், விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சம்பவம் குறித்து டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரேக் அபாட் கூறுகையில், " டெக்சாஸ் மாநில அரசும், போலீஸாரும் இணைந்து சட்டத்தை திறமையாக நிலைநாட்டி இதுபோன்ற சம்பவங்களுக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். இதுபோன்று மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அறிவற்றது.

போலீஸாரின் எச்சரிக்கையை ஏற்று விரைவாகச் செயல்பட்ட மக்களுக்கும், துப்பாக்கியால் சுட்டவரை விரைந்து பிடித்த போலீஸாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். டெக்சாஸ் மாநிலம் துப்பாக்கி கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக மாற அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்துக்குள் டெக்சாஸ் மாநிலத்தில் நடக்கும் 2-வது மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். இதற்கு முன் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் எல்பாசோ பகுதியில் உள்ள வால்மார்ட் கடையின் முன் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து நடந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்காவில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x