Published : 31 Aug 2019 12:31 PM
Last Updated : 31 Aug 2019 12:31 PM

காஷ்மீர் முடிவை திரும்பப் பெறாதவரை இந்தியாவுடன் அமைதிப்பேச்சு இல்லை: இம்ரான் கான் திட்டவட்டம் 

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த முடிவுகளை திரும்பப் பெற்று, காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் அமைதிப்பேச்சில் இனிமேல் ஈடுபடுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தையும், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தை கொண்டு் சென்று, தனது குரலுக்கு வலுச் சேர்த்து வருகிறது பாகிஸ்தான்.

ஆனால், பாகிஸ்தானுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை, இதனால் செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச எல்லைப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் படைகளையும், போர்விமானங்களையும் பாகிஸ்தான் அரசு நிறுத்திவருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தயாராக இருந்து வருகிறது

இந்த சூழலில் அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த தன்னிச்சையான முடிவை இந்த உலகம் தடுக்காவிட்டால், அணுஆயுதம் வைத்திருக்கும் இரு நாடுகள் நேரடியாக ராணுவ மோதலுக்கு தயாராகிவிடும். அதன்விளைவுகளை உலகம் முழுவதிலும் எதிரொலிக்கும்.

காஷ்மீர் விவகாரம் குறித்து இருநாடுகளும் பேசும் போது, அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் பேச்சுக்கு அழைக்க வேண்டும். குறிப்பாக காஷ்மீர் மக்களையும் பேச்சுக்கு அழைக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டவிரோதமான வகையில் இந்திய அரசு தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த முடிவை இந்திய அரசு திரும்பப் பெற்று, காஷ்மீரில் நீடிக்கும் ஊடரங்கு கட்டுப்பாடுகள், கதவடைப்புகள், பாதுகாப்பு கெடுபிடிகளை நீக்கினால் மட்டுமே இனிமேல் இந்தியாவுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவோம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக பதவி ஏற்றபோது, என்னுடைய முதல் முன்னுரிமை எனப்து, தெற்கு ஆசியாவில் அமைதியை நீண்டகாலத்துக்கு நீடிக்கச் செய்ய வேண்டும்,அதற்கான பணியாற்ற வேண்டும் என்று முடிவி செய்தேன். ஆனால் அமைதிப் பேச்சுக்காக நான் செய்த அனைத்து முயற்சிகளையும், இந்திய அரசு நிராகரித்துவிட்டது.

தெற்கு ஆசியாவைச் சுற்றி அணுஆயுத மேகம் சூழ்ந்துள்ளது. இந்த சூழலை உணர்ந்து, இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த சூழலில் இருந்து விடுபட்டு, காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாமல் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசின் அணுஆயுதம் குறித்தபேச்சு குறித்து சமீபத்தில் இந்தியவெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " தெற்குஆசியாவில் அணுஆயுதம் குறித்துப் பேசி பாகிஸ்தான் பதற்றமான, அச்சமான சூழலை உருவாக்க முயல்கிறது. அவர்களைப் பொறுத்தவரைதான் அச்சமானசூழல், சர்வதேச அளவில் போர்வரும் சூழல் இருக்கும் என நினைக்கவில்லை. இது கவனத்தை ஈர்க்கும் ஒருவகையான செயல்" எனத் தெரிவித்திருந்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x