Published : 30 Aug 2019 06:02 PM
Last Updated : 30 Aug 2019 06:02 PM

மீண்டும் மீண்டும் போர் பதற்றத்தைத் தூண்டும் இம்ரான் கானின் சர்ச்சைப் பேச்சு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தைத் தூண்டும் பேச்சினை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து உதிர்த்து வருகிறார்.

தி நியூயார்க் டைம்ஸ் இதழின் நடுப்பக்கத்தில் இம்ரான் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், "காஷ்மீர் மீதும் அதன் மக்கள் மீதும் இந்தியா தொடர்ந்து அத்துமீறுவதைத் தடுக்க உலக நாடுகள் எதுவும் செய்யாவிட்டால் இரண்டு அணு ஆயுத சக்திகளும் நேரடி ராணுவ மோதலை நோக்கிச் செல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது.

இதற்கு பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவைத் தவிர உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு இவ்விவகாரத்தில் எதிர்பார்த்த ஆதரவைத் தரவில்லை.

இந்நிலையில்தான், காஷ்மீர் மக்களுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள மக்கள் 30 நிமிடங்கள் வீட்டைவிட்டு வெளியேவந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார் இம்ரான் கான்.

இத்தகைய சூழலில் இம்ரான் கான் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை இந்தியா மீதான வெறுப்புணர்வை பளிச்சென்று பறைசாட்டுவதாக உள்ளது.

அதில் ஒரு பத்தியில், "பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எங்கள் மீது குற்றஞ்சாட்டியது. நாங்கள் ஆதாரம் கேட்டோம். ஆனால் இந்தியா விமானப்படை விமானங்களை அனுப்பியது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆனால் மோடி அதை ஏதோ திருப்திப்படுத்தும் முயற்சி என நினைக்கிறார். நாங்கள் ஆர்.எஸ்.எஸ். வழித்தோன்றல்களால் நிர்வகிக்கப்படும் புதிய இந்தியாவை எதிர்க்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டுரை இம்ரான் கானின் வெறுப்புணர்வையும் இந்தியா மீதான பகை உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x