Published : 30 Aug 2019 12:41 PM
Last Updated : 30 Aug 2019 12:41 PM

தமிழ் குழந்தைகளை இலங்கைக்கு நாடு கடத்திய ஆஸி. அரசு: புறப்பட்ட விமானத்தை தரையிறங்க வைத்த மனிதாபிமான நீதிபதியின் உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஈழத்தமிழ் கணவன், மனைவி அவர்களின் 2 பெண் குழந்தைகளை, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவர நீதிபதி உத்தரவிட்டதால் நடுவானில் பறந்த விமானம் மீண்டும் திரும்பி தரையிறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

மனிதாபிமான நீதிபதியின் உத்தரவுக்கு மகிழ்ச்சி தெரிவித்த மக்கள், அந்த குழந்தைகள் நிரந்தரமாக தங்குவதற்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழர்களான கணவனும் மனைவியும் கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டில் தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக வந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தார்கள்.

இதில் ஈழத் தமிழர்களான கணவனுக்கும், மனைவிக்கும் ஆஸ்திரேலியாவில் இரு பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகளான கோபிகாவுக்கு 4 வயதும், 2-வது மகளான தருணிகாவுக்கு 2 வயதும் தற்போது ஆகிறது.

இந்நிலையில், இந்த ஈழத் தமிழ் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தற்காலிகமான விசா காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு முடிவு செய்து நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து மெல்போர்ன் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து நேற்று இரவு ஈழத்தமிழ் குடும்பத்தினர் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கையில் பிறந்த ஈழத்தமிழ் கணவருக்கும், மனைவிக்கு மட்டுமே குடியுரிமை இருக்கிறது, ஆனால், ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் இரு குழந்தைகளான தருணிகா, கோபிகா இருவருக்கும் இலங்கை அரசு குடியுரிமை வழங்காது, ஆஸ்திரேலய அரசும் குடியுரிமை வழங்காது.

இலங்கைக்கு தங்கள் பெற்றோருடன் சென்றாலும் இந்த இரு குழந்தைகளும் நாடு அற்றவர்களாகவே இருக்க வேண்டியது வரும், என்ற சூழல் இருந்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் நேற்று இரவு முறையிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹீதர் ரிலே ஈழத் தமிழர் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்ப தடைவிதித்தார்.

ஆனால், அவர் இந்த உத்தரவு பிறப்பிக்கும் போது, விமானம் ஆஸ்திரேலயாவின் டார்வின் நகரை விட்டு இலங்கை நோக்கி புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து நீதிபதி ஹீதரிடம் அதிகாரிகள் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், நீதிபதி ஹீதர் அதற்கு சம்மதிக்காமல் விமான நிலையத்துக்கு தொலைபேசியில் பேசி விமானத்தை உடனடியாக தரையிறங்க உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவையடுத்து, வானில் பிறந்த விமானம் மீண்டும் டார்வின் நகரில் தரையிறக்கப்பட்டது.
அந்த ஈழத் தமிழ் குடும்பத்தினர் டார்வின் நகரில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து உள்துறை விவகாரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உள்நாட்டு ஊடகத்திடம் கூறுகையில், " இலங்கையைச் சேர்ந்த அந்த ஈழத்தமிழ் குடும்பத்தினர் அகதிகளாக கருதப்பட மாட்டார்கள், அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பாதுகாப்பு அளிக்காது. அவர்கள் அகதிகள் இல்லை என்பதை அந்த குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்". எனத் தெரிவித்தார்.

ஈழத்தமிழ் அகதிகளின் செய்தித்தொடர்பாளர் அரியன் மயில்வாகனம் : படம் உதவி ட்விட்டர்

ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி. கிறிஸ்டினா கென்னாலி கூறுகையில், " ஈழத்தமிழ் குடும்பத்தினர் விவகாரத்தில் பிரதமர் மோரிஸன் தலையிட வேண்டும். குறிப்பிட்ட காலம்வரை இந்த குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்.

இங்குள்ள உள்நாட்டு மக்களுக்கு சேவை செய்யவும் அனுமதிக்க வேண்டும். ஒரு தந்தையாகவும், கிறிஸ்தவராகவும் கேட்கிறேன். கருணையுடனும், மனிதநேயத்துடன் இந்த விஷயத்தை அனுக வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஈழத்தமிழ் அகதிகளின் செய்தித்தொடர்பாளர் அரியன் மயில்வாகனம் கூறுகையில், " ஈழத்தமிழக் குடும்பத்தினர் படகில் வந்துள்ளார்கள், அவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் நிச்சயம் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திப்பார்கள். தமிழர்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடாக இலங்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று காலை மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஈழத் தமிழ் குடும்பத்தினர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த குடும்பத்தினரை வரும் புதன்கிழமை வரை ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றக்கூடாது என நீதிபதி தடைவிதித்தார்.

நீதிபதியின் தீர்ப்புக்காக நீதிமன்றத்துக்கு வெளியே ஏராளமான ஆஸ்திரேலிய பொதுமக்கள் காத்திருந்தனர். ஈழத் தமிழ்குடும்பத்தினரை ஆஸ்திரேலயாவில் நிரந்தரமாக தங்க உத்தரவிட வேண்டும் என்றுகோரி அவர்கள் கோஷமிட்டனர்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x