

ஹாங்காங் போராட்டத்தில் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் ஒருவரான ஜோஷ்வா வாங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் ஹாங்காங்கில் மாணவர்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளும் இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை ஹாங்காங் போராட்ட கலவரங்களில் 800 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹாங்காங் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான சமூக செயற்பாட்டாளரான ஜோஷ்வா வாங் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரகளிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த கைதை ஜோஷ்வா வாங்கின் கட்சி டிமோசிஸ்டோ உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி தரப்பில், “ எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜோஷ்வா வாங் இன்று காலை 7. 30 மணியளவில் கைது செய்யபட்டார். இந்த கைது தொடர்பாக வழக்கை எங்கள் வழக்கறிஞர்கள் கவனித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
வாங் கைது செய்யப்பட்டது குறித்த எந்த தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை.