இந்திய விமானங்களுக்கு முழுமையான தடை விதிக்க முடிவா? - பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்

இந்திய விமானங்களுக்கு முழுமையான தடை விதிக்க முடிவா? - பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் வான்வழியின் அனைத்து வழித்தடங்கள் வழியாக இந்திய விமானங்கள் செல்ல முழுமையாக தடை விதிக்க முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்தே பாகிஸ்தான் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது.

அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக, போக்குவரத்து உறவுகளைத் துண்டித்துக்கொண்டது. தூதரக அதிகாரிகளையும் வாபஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தையும் அந்நாடு நிறுத்தியுள்ளது.

மேலும் இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் குறிப்பிட்ட வான்வழி தடங்கள் வழியாக பறக்கவும் தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட அந்த வழித்தடங்கள் வழியாக செல்லும் இந்திய விமானங்கள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுச்செல்லும் சூழல் உள்ளது. இதனால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியாக செல்லும் அனைத்து வழித்தடங்களையும் மூடப்போவதாக கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்தரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘பாகிஸ்தான் வான்வழியாக செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் இந்திய விமானங்கள் செல்ல தடை விதிப்பது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.

அதுபோலவே பாகிஸ்தான் வழியாக சென்று ஆப்கானிஸ்தானுடன் இந்தியா வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்படும்’’ என அறிவித்தார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இதுபற்றி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வான்வழியாக இந்திய விமானங்கள் செல்லும் அனைத்து வழிதடங்களையும் மூடுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

அமைச்சவைக் கூட்டங்களில் இதுபற்றி எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. எனினும் இந்தியாவின் அணுகுமுறையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் பிரதமர் இம்ரான் கான் இறுதி முடிவு எடுப்பார்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in