Published : 29 Aug 2019 12:31 PM
Last Updated : 29 Aug 2019 12:31 PM

அணு ஆயுதம் சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் காஸ்நவி ஏவுகணையை சோதனை செய்த பாகி்ஸ்தான்

இஸ்லாமாபாத்,

அணு ஆயுதங்களைச் சுமந்துசென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரி நாடுகளைத் தாக்கி அழிக்கும் 'காஸ்நவி' ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளது

இந்தத் தகவலை பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் உறுதி செய்து, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. அந்த மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்து ஆதரவு தேடியது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் உதவவில்லை. இதையடுத்து, ஐநாவுக்கு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது பாகிஸ்தான். செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தேவையில்லாமல் ஏராளமான படைகளைக் குவித்து, போர் விமானங்களையும் நிறுத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்த சூழலில் இன்று அதிகாலை அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும், அணு ஆயுதம் சுமந்து செல்லக்கூடிய காஸ்நவி ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது.

இதற்காக கராச்சி வான்வழியை நேற்று இரவு முதல் பாகிஸ்தான் முடக்கி, எந்த நாட்டின் விமானங்களும் அந்தப் பகுதிக்குள் வருவதற்குத் தடை விதித்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் கராச்சி அருகே சோன்மியானி எனும் இடத்தில் காஸ்நவி ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆஷிப் கபூர் ட்விட்டரில் கூறுகையில், " அணு ஆயுதம் தாங்கிச் சென்று அழிக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் காஸ்நவி ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக சோதித்தது. இந்த ஏவுகணை 290 கி.மீ. பாய்ந்து செல்லக்கூடியது. ராணுவத்துக்கும், ராணுவ ஆய்வுக்குழுவினருக்கும் அதிபரும், பிரதமரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x