Published : 29 Aug 2019 07:40 AM
Last Updated : 29 Aug 2019 07:40 AM

குடியேறிகளின் எதிரி டொனால்டு ட்ரம்ப்

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்றுமே குடியேறிகளுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற வருபவர்களுக்கு எதிரான தனது கொள்கைகளையே, தனது முக்கிய தேர்தல் பிரச்சாரமாகக் கையாண்டு அதிபரானவர் அவர். இதன் அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமையாக இருக்கும் அமெரிக்க குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகக் கூறியிருக்கிறார் ட்ரம்ப். பெற்றோர் அமெரிக்கர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் இதன் அர்த்தம். "பிறப்புரிமை மூலம் கிடைக்கும் குடியுரிமையை ரத்து செய்வது குறித்து யோசித்து வருகிறோம். எல்லை தாண்டி எங்கள் நாட்டுக்குள் வருவீர்கள்.. குழந்தையைப் பெற்றுக் கொள்வீர்கள்.. சந்தோஷம்.. பாராட்டுக்கள்.. இப்போது அந்தக் குழந்தை அமெரிக்க குடிமகன். இது என்ன அபத்தமாக இருக்கிறது" என வெள்ளை மாளிகையில் நிருபர்களிடையே பேசிய ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளை மனதில் கொண்டே இதைப் பேசியிருக்கிறார் அவர்.

பிறப்புரிமை மூலம் கிடைக்கும் குடியுரிமை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுவது இதுவொன்றும் முதன்முறையல்ல என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை முன்பு இந்த விஷயத்தைக் கொண்டு செல்லாமல், அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். பிரதிநிதிகள் சபையில் மட்டுமல்லாது தனது குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருக்கும் செனட் சபையிலும் கூட இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவு கிடைக்காது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். குடியுரிமை விவகாரம் என்பது அரசியல் ரீதியாகவும் தேர்தல் ஆதாய ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய விஷயம் என்பதை அங்குள்ள அரசியல்வாதிகள் அறிவார்கள். ஆனால், அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் யாருக்கும் ஆச்சரியம் அளிக்காது. அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் குடியுரிமையையே கேள்வி கேட்ட வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர் அவர். அமெரிக்காவிலேயே பிறக்காத ஒபாமா, அதிபர் தேர்தலில் போட்டி யிடுகிறார் என 2008-ம் ஆண்டில் பிரச்சாரம் செய்தார் ட்ரம்ப். 2017-ம் ஆண்டில்தான் ஒபாமா ஒரு அமெரிக்கர் என்பதை ஏற்றுக் கொண்டார்.

அமெரிக்காவில் சட்ட ரீதியாக மற்றும் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் குடியேறிகளைப் பொருத்தமட்டில் ஒரு விஷயத்தில் அவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்தான். குடியேறிகளுக்கு எதிரான ட்ரம்பின் பல திட்டங்களை அங்குள்ள நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன. அமெரிக்காவின் 14-வது திருத்தத் சட்டம், அங்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் அமெரிக்க குடியுரிமை பெறுவார்கள் என்கிறது. சட்ட நிபுணர்களும், ‘‘பெற்றோர் அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.. அவர்கள் சட்ட ரீதியாக தங்கியிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.. இந்த சட்டம் பொருந்தும்’’ என்கிறார்கள். ஆனால், குடியுரிமை என்பது பிறப்புரிமையாக இருப்பதால், சட்ட விரோத குடியேறிகள் இதற்காகவே இங்கு வருகிறார்கள். அதனால் அந்த சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார் ட்ரம்ப். அப்படிச் செய்தால். அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், அந்த சட்டத்தை ரத்து செய்தால், அதை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராட்டம் நடக்கும் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள், குடியுரிமைக்காக தங்கள் குழந்தைகளை அமெரிக்கா வந்து பெற்றுக் கொள்வதாகவும் அதன்பின் தங்கள் நாடுகளுக்கே திரும்பிச் சென்று விடுவதாகவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அப்படி எத்தனை பேர், அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என எந்த புள்ளி விவரமும் இல்லை. கடந்த 2012-ல் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 36 ஆயிரம் பெண்கள் அமெரிக்காவில் குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு, சொந்த நாடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் எந்த விசாவில் வந்தார்கள், அவர்கள் அனைவருமே சட்ட விரோதமாக வந்தவர்களா என்ற விவரம் எதுவும் இல்லை. அடுத்த ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தல் வருகிறது. அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. சரியாக தேர்தலை கணக்கில் கொண்டு, இந்த நேரத்தில் பிறப்புரிமை மூலம் கிடைக்கும் குடியுரிமை பிரச்சினையை ட்ரம்ப் கையில் எடுத்துள்ளார். எனவே, கடந்த 2016-ம் ஆண்டைப் போலவே இந்த தேர்தலிலும் குடியுரிமை பிரச்சினையே பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம்.

குடியுரிமை தொடர்பாக பல நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்து வருகிறது. குடியேறிகளின் குழந்தைகளை தடுப்புக் காவல் முகாம்களில் வைத்திருப்பதற்கான கால அவகாசத்தை மாற்றி அமைப்பது, தெற்கு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்துவது, அரசுக்கு சுமையாக, அரசின் நிதியுதவி பெறும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமையை மறுப்பது என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடியுரிமை விவகாரம்தான் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக இருக்கும் என்பது ஜனநாயகக் கட்சியினருக்கும் நன்றாகவே தெரியும். இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக அவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பிரச்சினை, மிகவும் சிக்கலானது.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x