Published : 28 Aug 2019 09:49 PM
Last Updated : 28 Aug 2019 09:49 PM

பிரெக்ஸிட் நிறைவேறுமா?- இங்கிலாந்து நாடாளுமன்றம் அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கம்: ராணி எலிசபெத் ஒப்புதல்

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்ஸிட் கெடு அக்டோபர் 31-ம் தேதியோடு முடிவடையும் நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதிவரை முடக்கிவைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் கோரிக்கைக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரெக்ஸிட்டை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்ஸன் துணிச்சலாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளா். ஆனால், போரிஸ் ஜான்ஸனின் இந்த முடிவு இங்கிலாந்தில் பெரும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

இதுகுறித்து இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில், " நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு கூட்டம் முடிந்தபின், செப்டம்பர் 10-ம் தேதிக்கு பின்பில் இருந்து அக்டோபர் 14-ம் தேதிவரை இங்கிலாந்து நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலம் முடிந்து எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு செப்டம்பர் 3-ம் தேதி திரும்புகின்றனர். அந்த நேரத்தில் முடக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டுள்ளார்.

இந்த முடக்கத்தின் முக்கிய நோக்கமே, பிரக்ஸிட் திட்டத்தை எதிர்க்கவும், தடுக்கவும் எம்.பி.க்களுக்கு குறைந்த அளவு அவகாசத்தை மட்டுமே அளிக்க வேண்டும். பிரெக்ஸிட்டை எப்படியாவது நிறைவேற்றுவது என்ற தீர்மானத்துடன் இது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரெக்ஸிட்டில் ஐரோப்பிய கூட்டணியுடன் ஒப்பந்தம் செய்தோ அல்லது செய்யாமலோ பிரெக்ஸிட்டை நிறைவேற்றியே தீருவோம், இது அக்டோபர் 31-ம் தேதிக்குள் நடக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்திருந்தார். ஆனால் அரசின் இந்த முடிவுக்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

ஆனால் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இது நியாயமில்லாத நடவடிக்கை. இதை ஏற்க முடியாது என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். இங்கிலாந்து என்ன எதிர்பார்த்திருந்ததோ அது நடக்கப்போகிறது என்று ட்விட்டரி்ல அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2016-இல் பிரதமரான தெரசா மே, ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் முடிவை நிறைவேற்றியே தீர்வது என்கிற முனைப்புடன்தான் பதவி ஏற்றார். ஆனால், தெரசா மேயின் பிரெக்ஸிட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்ததால் அவர் பதவி விலகினார். தெரசா மேயைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பிரதமரானார்.

முன்னாள் பத்திரிகையாளரான போரிஸ் ஜான்சன், அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியே தீர்வோம் என்று உறுதிமொழியோடு பிரதமராகப் பதவி ஏற்றார்.
முன்னாள் பிரதமர் மே, கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் அவர் நிராகரித்து இருந்தார்.

இதனால், மீண்டும் பிரெக்ஸிட் குறித்து பேச்சு நடத்த கூட்டமைப்பு தயாராக இல்லை.
மேலும், ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது இங்கிலாந்துக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், முந்தைய வாக்கெடுப்பில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இங்கிலாந்து வாக்காளர்கள் பிரெக்ஸிட் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால், இப்போது மக்கள் மத்தியில் பரவலாக மன மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதால், பொருளாதாரக் குழப்பம் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

மேலும் பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்று ஸ்காட்லாந்து வாக்களித்திருந்தது. பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரெக்ஸிட் தீர்மானத்தில் பிடிவாதமாக இருந்து நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பதால், ஸ்காட்லாந்து இங்கிலாந்தில் இருந்து பிரியும் முடிவை எடுக்கலாம்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று பிரெக்ஸிட் முடிவை நிறைவேற்றுவதும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குப் பிரச்னையாகத்தான் இருக்கும் எனத் தெரிந்துதான் இப்போது நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதிவரை முடக்கியுள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x