Published : 28 Aug 2019 04:57 PM
Last Updated : 28 Aug 2019 04:57 PM

பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்பிக்கள் எதிர்ப்பு: இங்கிலாந்து நாடாளுமன்றம் அக். 13-ம் தேதிவரை ஒத்திவைப்பு?

பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்பிக்கள் எதிர்ப்பு காரணமாக, நாடாளுமன்றத்தை அக்டோபர் 13-ம் தேதிவரை ஒத்தி வைக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அக்டோபர் மாதத்தின் இறுதியில் வெளியேற வேண்டும் (பிரெக்ஸிட்) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

முடிவு எட்டப்படாத நிலையில் ஒப்பந்தம் தொடர்பாக எம்பிகள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை அக்டோபர் 13-ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது தொடர்பான எந்தச் செய்தியையும் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிடவில்லை.

முன்னதாக, ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை 'பிரெக்ஸிட்' என்று அழைத்து வந்தனர்.

ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்று முறை தோல்வி அடைந்தது.

ஆளும் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்) உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்தார் தெரசா மே.

இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமராக ஜூலை மாதம் பதவி ஏற்றுக் கொண்டார்.

பதவி ஏற்றதும் இன்னும் 3 மாதங்களுக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து எதிர்மறைக் கருத்தைத் தெரிவிப்பவர்கள், சந்தேகிப்பவர்களின் கூற்றைத் தவறு என்று நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x