

ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதா முழுமையாக பின்வாங்கப்பட வேண்டும், நடுநிலை அமைப்பு ஒன்று போராட்டக்கார்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடத்த மோதலை விசாரிக்க வேண்டும்,, போராட்டத்தை கலவரம் என்று கூறியதை திரும்பப் பெற வேண்டும் ,போலீஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும். ,தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் போராட்டம் தொடங்கியது முதல் தற்போது கைதானவர்களின் எண்ணிக்கையை ஹாங்காங் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அதில், “கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த போராட்டத்தில் இதுவரை 800க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் 19 - 40 வயதுக்குக்கு உள்ளானவர்கள்” என்று ஹாங்காங் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டங்களில் போரட்டக்காரர்கள் தவிர்த்து சாதாரண பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கைதானவர்களை விடுவிக்கும்படி போராட்டக்காரர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.