Published : 27 Aug 2019 09:33 PM
Last Updated : 27 Aug 2019 09:33 PM

'மோடி தொடங்கினார், நாங்கள் முடிக்கிறோம்': பாக் வான், சாலை வழிகளை முழுமையாக மூட திட்டம்: பாக் அமைச்சர் பேச்சு

இஸ்லாமாபாத்,

இந்திய விமானங்கள் செல்லாத வகையில் பாகிஸ்தானின் அனைத்து வான்வழிகளையும், சாலை வழிகளையும் முழுமையாக மூடுவதற்கு பாகிஸ்தான் ஆலோசித்து வருகிறது என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப்பெற்றது. மேலும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக உறவை முறித்துக்கொண்ட பாகிஸ்தான், பஸ், ரயில் போக்குவரத்தையும் ரத்து செய்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டும் பணியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறங்கினார். ஆனால், பாகிஸ்தான் பேச்சுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை.

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. எல்லைப்பகுதியில் படைகளையும், போர்விமானங்களையும் குவித்து பதற்றத்துடன் பாகிஸ்தான் ராணுவம் வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாயாராக இருக்கிறது.

இந்த சூழலில் பாகிஸ்தானின் அறிவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் கூறுகையில்,

"பாகிஸ்தான் அரசின் மத்திய அமைச்சரவை இன்று கூடிய சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தது. அதில் முக்கியமானது இந்திய விமானங்கள் செல்லாத வகையில் பாகிஸ்தானின் அனைத்து வான்வழிகளையும் முழுமையாக மூட ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல பாகிஸ்தான் சாலை வழியாக, இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் வர்த்தகம் செய்வதையும் முழுமையாகத் தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் என்ன எடுக்கலாம் என்பது குறித்து கேட்டுள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும். மோடி தொடங்கி வைத்தார், நாங்கள் முடித்து வைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலக்கோட்டில் சென்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாம்கள் அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்தாத வகையில் கடந்த ஜூலை 16-ம் தேதி மூடி, பின்னர் அனுமதித்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வான் வழியாக நாள்தோறும் 50 விமானங்கள் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x