

தங்களது நாட்டில் இந்தியா திட்டமிட்டு தீவிரவாதத்தை வளர்த்து வருவதாக குற்றம்சாட்டிய பாகிஸ்தான், அதுதொடர்பான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களை, இந்திய உளவு அமைப்பான 'ரா' பின்னணியில் இருந்து இயக்குவதாக பாகிஸ்தான் உளவுத்துறை குற்றம்சாட்டி, இதனை ஐ.நா-வின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரத்தையும் பாகிஸ்தான் அளிக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஆஸிஸ் அகமது சவுதாரி, தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவியது தொடர்பாக பாகிஸ்தானிடம் ஆதாரம் உள்ளதாக தெரிவித்தார்.
ஆஸிஸ் அகமது சவுதாரி அளித்த தகவல் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி, "சவுதாரி குறிப்பிட்ட வகையிலான எந்த ஆதாரமும் எங்களது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதே எங்களது விருப்பம். இரு நாடுகளும் தங்களது பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், இந்தியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.