

மனாமா,
பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணர் கோயில் ரூ.30 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த கோயில் புனரமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும். 30 மீட்டர் உயரத்தில் 45 ஆயிரம் சதுர அடியில் கோயில் புனரமைக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கி அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி சந்தித்தபின் பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாகச் சென்றார். அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபாவைச் சந்தித்து பிரதமர் மோடி பல்ேவறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பஹ்ரைனுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சாரபரிமாற்றம், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
அதன்பின், மனாமா நகரில் உள்ள தேசிய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி அங்கு வந்ததும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் செல்போனில் உள்ள விளக்குகளை ஒளிரவிட்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
திரளான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
பன்முகத்தன்மை, இந்தியாவின் பல வண்ணங்களும்தான் நமது வலிமை, இவைதான் உலகின் கவனத்தைப் பெற்று ஈர்க்கின்றன. நான் பிரதமராக பதவி ஏற்றபின் நீண்ட ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக பஹ்ரைனுக்கு வந்துள்ளேன். இந்த நாட்டுக்கு முதல்முறையாக வந்த இந்தியப் பிரதமரும் நானாகத்தான் இருக்கிறேன்.
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான இந்தயர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் என்னுடைய தலைமையிலான அரசில் இந்தியா முன்னோக்கி செல்கிறது. தேசம் எனும் வாகனத்தின் ஸ்டீரிங்கை மட்டுமே அரசு கைவசம் வைத்துள்ளது, அதன் வேகத்தை அதிகரிக்கும் ஆக்ஸிலேட்டர் தேசத்தின் மக்கள்தான் .
ஒவ்வொரு இந்தியர்களும் தங்களின் நம்பிக்கைகள், கனவுகள் நிறைவேறுகிறது என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் வலிமைதான், புதிய தீர்மானத்தை நிறைவேற்றும் விஷயத்தில் நான் ஆர்வமாக இருக்கிறேன்.
நம்முடைய இலக்குகள் உயர்வானவை. அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற இருக்கிறோம்.
பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க அரங்கில் கூடியிருந்த இந்தியர்கள் : படம் ஏஎன்ஐ
இந்தியாவை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களா?(மோடி கேட்டவுடன் மக்கள் ஆம் என்று பதில் அளித்தார்கள்).விரைவில் இங்கு ரூபே கார்டு மூலம் பொருட்களை வாங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய அரசு பஹ்ரைன் அரசுடன் செய்துள்ளது. இதன் மூலம் தாய்நாட்டில் உள்ள உங்களின் உறவுகளுக்கும், குடும்பத்தினருக்கும் ரூபேகார்டு மூலம் பணம் அனுப்ப முடியும்.
செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கிறது. ஒட்டுமொத்த உலகமே இந்தியாவின் விண்வெளி குறித்து பேச இருக்கிறது. நம்முடைய திறமையை வைத்து, சிறிய பட்ஜெட்டில் எவ்வாறு மிகப்பெரிய வெற்றியை அடைந்தார்கள் என்று உலகம் பிரமிக்கப்போகிறது.
பஹ்ரைனில் வாழும் இந்தியர்களின் சமூக பொருளாதார வாழ்க்கைக்கு உங்களின் நேர்மை, கடினமான உழைப்பு, விஸ்வாசம் முக்கிய பங்களிப்புகளை செய்கிறது. பஹ்ரைன் நாட்டுடன் வர்த்தகம், வியாபாராம் ஆகியவற்றோடு உறவுகள் இல்லாமல், அதைக்காட்டிலும் கடந்த மனிதநேயம், உயர்ந்த மதிப்புகள், கலாச்சாரத்தோடு தொடர்பு இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
பிடிஐ