

மனாமா
பிரதமர் மோடி, பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே வணிக உறவுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அரபு நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். இப்பயணத்தில் இருநாடுகளுக்கிடையேயான பணப்பரிவர்த்தனைத் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை உயர்த்துவதற்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை ஐக்கிய அரபு அமீரகம் பாராட்டியது. அதற்கு அடையாளமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் சயீத்' வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.
பஹ்ரைன்
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றார். அவரை, தலைநகர் மனாமாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு இளவரசரும், பிரதமருமான கலீஃபா பின் சல்மான் அவரை வரவேற்றார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பதிவில், ''பிரதமர் நரேந்திரமோடி பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவை சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். இருநாட்டுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர்'' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பஹ்ரைன் இளவரசரை சந்தித்தப் பின் பிரதமர் மோடி அந்நாட்டின் மன்னரையும் சந்தித்ததாகவும் பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவுடன் பல்வேறு இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மேலும் நேற்று பஹ்ரைனில் பிரதமர் மோடி ''தி கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரெனாய்சான்ஸ்'' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அரபு நாடுகள் பயணங்களை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பஹ்ரைனில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.