Published : 24 Aug 2019 04:34 PM
Last Updated : 24 Aug 2019 04:34 PM

காஷ்மீர் விவகாரம்: அரசியலமைப்பு 370 பிரிவு நீக்கம் ஜனநாயக அடிப்படையில் வெளிப்படையாக நடந்தது: பிரதமர் மோடி பேட்டி

அபுதாபி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, அரசியலமைப்புசட்டத்தில் உள்ள 370 பிரிவை திரும்பப் பெற்ற நடவடிக்கை அனைத்தும் ஜனநாயக அடிப்படையில், வெளிப்படையாகவே, அரசியலமைப்புக்கு உட்பட்டு நடந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு நேற்று ஐக்கி அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தினார்.

அதன்பின், பிரதமர் மோடி, அபுதாபியில் வெளியாகும் தி கலீஜ் டைம்ஸ்க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகளை வழங்கிய அரசியலமைப்பு 370-ம் பிரிவை என்னுடைய அரசு நீக்கியதன் மூலம், அந்த மாநிலம் ஒதுங்கி இருந்தது முடிவுக்கு வந்துள்ளது. சிலரின் சுயநலத்தாலும், விருப்பத்தாலும் அந்த மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதைக்கு திரும்பாமலேயே இருந்துவந்தது.

காஷ்மீர் தனித்து இருந்ததன் காரணமாகவே, அங்குள்ள இளைஞர்கள் தவறான வழிகாட்டலால், வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு பயன்பட்டனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் வளர்ச்சி, மேம்பாடு தேவை என்று குறிக்கோளோடு செல்லும் போது, நம்முடைய ஒற்றுமையான சமூகத்தில் இதுபோன்ற மனநிலையை, போக்கை தாங்கிக்ககொள்ள முடியாது .
எங்களின் நிலைப்பாட்டை புரிந்துகொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தை வரவேற்கிறேன்.

அரசியலமைப்பு பிரிவு 370 பொறுத்தவரை, இது எங்களின் உள்நாட்டு நடவடிக்கை. இந்த நடவடிக்கை முழுமையாக வெளிப்படையாகவும், ஜனநாயக முறைப்படியும், அரசியலமைப்புக்கு உட்பட்டும் நடந்தது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

தீவிரவாதத்தைப் பொறுத்தவரை எல்லைதாண்டிய தாக்குதலில் 40 ஆண்டுகளாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மனிதநேயத்துக்கு எதிரான சக்திகளுக்கு ஊக்கமளிப்பது, ஆதரவு அளிப்பது ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாடு இருப்பதில் இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஒரேமாதிரியான மனநிலையில் இருக்கின்றன. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் வலிமையான நடவடிக்கைகளை முழுமையாக ஐக்கிய அரசு அமீரகம் அரசு புரிந்துகொண்டுள்ளது. பரஸ்பர பாதுகாப்பை உறுதி செய்ய இருவரும் முழுமையான கூட்டுறவோடு செயல்படுகிறோம்.

தீவிரவாதம் மற்றும் மதஅடிப்படைவாதம் மனிதகுலத்துக்கு ஆபத்தானவை. இவற்றை முழு வலிமையோடு எதிர்ப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு. இருநாடுகளின் மதிப்பான விஷயங்கள், பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா, ஐக்கியஅமெரிக்க அமீரகம் கூட்டுறவோடு செயல்படுகின்றன.

சகிப்புத்தன்மையில் ஐக்கியஅரபு அமீரகமும், மதச்சார்பற்ற இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்த நாடுதான் 2-வது தாய்நாடு. பன்முகத்தன்மை அளிக்கும் வரவேற்பாகவே இங்கு வருவதை உணர்கிறேன். எத்தனை நாடுகள் தங்கள் அமைச்சரவையில் சகிப்புத் தன்மைக்கு தனியாக அமைச்சர் வைத்திருக்கிறார்கள். ஒற்றுமை, சமூகநல்லினக்கத்தை வளர்க்கும் இந்த நாட்டின் செயலை வரவேற்கிறேன். இந்தியர்கள் பணியாற்றும் பகுதியில் இந்துக் கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததே மிகப்பெரிய மைல்கல்லாகும். ஐக்கிய அமரீக அரசின் தலைமையின் இந்த நல்லெண்ண நடவடிக்கையை நான் உண்மையாகவே வரவேற்கிறேன்
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x