Published : 24 Aug 2019 02:08 PM
Last Updated : 24 Aug 2019 02:08 PM

அதிக அன்பினால் வாழ்க்கை நரகமாகுமா? கணவரிடம் இருந்து விவாகரத்து கோரிய வித்தியாசமான பெண் 

பிரதிநிதித்துவப்படம்

புஜைரா,
அன்பில்லாத கணவன், கொடுமைக்கார கணவன், மனக்கசப்பு, கருத்துவேறுபாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டுத்தான் உலகில் பார்த்திருக்கிறோம். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்துக்கு கேட்டதற்கான காரணம் மிக வித்தியாசமானது.

ஐக்கிய அரபுநாடுகளில் வெளியாகும் 'கலீஜ் டைம்ஸ்' நாளேட்டில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா நகரைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவரின் அதிகமான அன்பாலும், தன்னை குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவதைப் பொறுக்க முடியாமல் விவாகரத்து கேட்டுள்ளார்.

புஜைரா நகரில் உள்ள ஷாரியா நீதிமன்றத்தில் அந்த பெண் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தில் அந்த பெண் கூறுகையில், " எங்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என்னுடைய கணவர் இதுவரை ஒருநாள் கூட என்னிடம் சண்டையிட்டது இல்லை. எப்போதும் என்னிடம் அன்பையும், காதலையும் பொழிகிறார்.
இதுபோன்ற கூடுதலான அன்பு எனக்கு நரகமாக இருக்கிறது. என்னை எந்தவிதமான கொடுமையும், கொடுஞ்சொல் கொண்டும் பேசுவதில்லை. என் கணவரின் அன்பும், கனிவான பேச்சும் நாளுக்கு நாள் உச்சத்தை அடைகிறது.

நான் வீடு சுத்தம் செய்தால்கூட என்னைக் கேட்காமல் எனக்கு உதவுகிறார், சமையலில் உதவுகிறார். ஒருமுறைகூட என்னிடம் சத்தம் போட்டு பேசியதும், வாதம் செய்ததும் இல்லை. அவரின் உடல் எடை அதிகரித்து இருப்பதைப் பற்றி கூறியபோது, அவரின் உடைந்த காலோடு எனக்காக கடினமான டயட்டை கடைபிடித்து, உடற்பயிற்சி செய்தார்.
அதுமட்டுமல்லாமல் எங்கு வெளியே சென்றுவிட்டு வந்தாலும் ஏராளமான பரிசுகளை வாங்கி வந்து குவிக்கிறார். ஒருநாளாவது என்னிடம் சண்டைபோடுவார் என எதிர்பார்க்கிறேன். ஆனால், சண்டைக்கு சாத்தியமே இல்லைபோல் தெரிகிறது. என்னுடையய அன்புக் கணவர் அதற்கு வழியே ஏற்படுத்திக்கொடுக்க மறுக்கிறார்.

எனக்கு உண்மையான விவாதம், சண்டை போன்றவை தேவை. இதுபோன்ற அளவுக்கு அதிகமான அன்பும், எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவரும் பிடிக்கவில்லை. ஆதலால் விவாகரத்து வேண்டும் " எனக் கோரியிருந்தார்.

இந்தவழக்கில் அந்த பெண்ணின் கணவர் வாதிடுகையில், " என் மனைவியிடம் இருந்து என்னை பிரித்துவிடாதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். திருமணம் நடந்து முதல் ஆண்டிலேயே எதையும் கணிப்பது கடினம். தவறுகளில் இருந்துதான் ஒவ்வொருவரும் கற்கமுடியும். நான் எப்போதும் சிறந்த கணவராக, கனிவான கணவராக இருக்கவே விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம், கணவன், மனைவி இருவரும் அமர்ந்து மீண்டும் மனம்விட்டு பேசுவிட்டு வாருங்கள் என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x