

ஐ.நா.
யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா சோப்ரா பேட்டி அளிப்பது அவரது தனிப்பட்ட உரிமையை பொறுத்தது; அவருக்கு அளித்த பதவியிலிருந்து அவரை நீக்க முடியாது என்று பாகிஸ்தானுக்கு ஐநா பதில் அளித்துள்ளது.
காஷ்மீரில் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஐநா போன்ற உலக நாடுகளின் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டுவரும் ஒருவர் இப்படி ஒரு நாட்டுக்கு ஆதரவாகவும் இன்னொரு நாட்டுக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் யுனிசெஃப் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதினார். பிரியங்காவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கும்படியும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஐ.நா., நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து பிரியங்காவை நீக்க முடியாது என மறுத்துள்ளது. ஐ.நா.அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற தினசரி செய்தியாளர்கூட்டத்தில் இதற்கு பதில் அளித்த பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:
''பிரியங்கா சோப்ரா, இந்திய ராணுவத்தை உற்சாகப்படுத்தி பதிவிட்டிருந்த ஒரு ட்வீட் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனினும் அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களை பேசுவதற்கு உரிமை உண்டு. கருத்துக்கள் கூறுவது என்பது அவரது தனிப்பட்ட திறமையை பொறுத்தது.
யுனிசெஃப் நல்லெண்ண தூதர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் பேசும்போது, அவர்கள் ஆர்வமுள்ள அல்லது அக்கறை கொண்ட பிரச்சினைகளைப் பற்றி பேசும் உரிமை அவர்களுக்கு உண்டு.
அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகள் யுனிசெப்பின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் அவர்கள் யுனிசெப் சார்பாக பேசும்போது, அவர்கள் யுனிசெப் தொடர்பான விஷயங்களை மட்டும் சார்ப்பற்ற நிலைப்பாடுகளை அவர்கள் கடைபிடிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பிரியங்கா சோப்ரா போன்ற நல்லெண்ண தூதர்களின் பங்களிப்பைப் பொறுத்தவரை யுனிசெஃப் நல்லெண்ண தூதர்கள் குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக தங்கள் நேரத்தையும் அவர்களின் பிரபலத்தன்மையையும் அளிக்க ஒப்புக் கொண்டவர்கள். பிரியங்கா சோப்ராவின் தனிப்பட்ட கருத்து யுனிசெஃப்பை கருத்தாக கருதப்படாது. ''
இவ்வாறு ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் பதில் அளித்தார்.