Published : 22 Aug 2019 11:06 AM
Last Updated : 22 Aug 2019 11:06 AM

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் மட்டும் போரிட வேண்டுமா?- இந்தியாவும் வரவேண்டும்: அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்,

உலகையே அச்சுறுத்திவரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக எங்களுடன் சேர்ந்து இந்தியா உள்பட ரஷியா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் போரிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

7 ஆயிரம் கி.மீ அப்பால் இருக்கும் அமெரிக்கா மட்டுமே தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகிறது, ஐஎஸ் ஆதிக்கம் மிகுந்த இடங்களுக்கு அருகே இருக்கும் நாடுகள் போரிடுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவப்படைகளும், நேட்டோ படைகளும் போரிட்டு வருகின்றன. ஆனால், தங்களுடைய படைகள் மட்டும் போரிட்டால் போதாது மற்ற நாடுகளும் இந்த போரில் இணைய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“உலகையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நாங்கள் மட்டும்தான் போரிட்டு வருகிறோம். 7 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்கா ராணுவத்தினர் சென்று போரிட்டு வருகிறார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு அருகே இருக்கும் நாடுகள் இந்த போரில் ஆர்வத்துடன் பங்கேற்பதில்லை.

ஒரு கட்டத்தில் ரஷியா, இந்தியா, ஈரான், ஈராக், துருக்கி, ஆகிய நாடுகளும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரில் பங்கேற்க வேண்டும். நாங்கள் 100 சதவீதம் அங்குள்ள கலிபாக்கள் ஆட்சியை ஒழித்துவிட்டோம்.

அதை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடித்துள்ளோம். ஆனால், ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளைச் சுற்றியிருக்கும் நாடுகள் அவர்களை வளரவிடாமல் தொடர்ந்து போரிட்டு அழிக்க வேண்டும்.

நாங்கள் இன்னும் 19 ஆண்டுகள்வரை ஆப்கானிஸ்தான் தங்கி இருக்க முடியாது. அவ்வாறு அமெரிக்க ராணுவம் தங்கி இருக்கும் என்று நினைக்கவும் இல்லை.

ஆதலால், குறிப்பிட்ட காலத்துக்குள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரான், துருக்கி, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளும் பங்கேற்க வேண்டும்.

இந்தியாவைப் பாருங்கள். அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதில்லை. ஆனால், நாங்கள் போரிடுகிறோம். அதேபோன்றுதான் பாகிஸ்தானும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடுவதில்லை அவ்வாறு பங்கேற்றாலும் மிகக்குறைவுதான்.

இது நியாயமில்லை. இந்த நாடுகள் போரில் பங்கேற்காது, நாங்கள் மட்டும் 7 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்துவந்து போரிடுகிறோம்.

என்னுடைய ஆட்சியில் 100 சதவீதம் ஐஎஸ் தீவிரவாதிகளின் தடங்களை அழித்திருக்கிறோம். இனியும் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் 98 சதவீத பணியை முடித்துவிட்டோம்.

இனி எங்கள் படை நாடு திரும்ப இருக்கின்றன, மற்ற நாடுகளும் இனி பொறுப்பேற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்”.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x