

இஸ்லாமாபாத், ராய்ட்டர்ஸ்
இந்தியாவுடனான காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
“இந்த முடிவு அனைத்து சட்ட விவகாரங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே எடுக்கப் பட்டுள்ளது” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.
“நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியா முடிவெடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் என்று அறிவித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது, லடாக் தொடர்பாக சீனாவும் எதிர்ப்பு தெரிவித்தது, இதனையடுத்து ஐநா மூடிய அறை விவாதம் நடைபெற்றது, இதில் பாகிஸ்தான், இந்தியா கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் ஐநா மூடிய அறைக் கூட்டத்தில் என்ன முடிவு எட்டபட்டது என்பது தெரியாத நிலையில் பாகிஸ்தான் முயற்சிகள் தோல்விகண்டதாக பல்வேறு தூதரகத் தரப்பு செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இம்ரான் கான், பிரதமர் மோடி, பாஜக-ஆர்.எஸ்.எஸ். குறித்து கடும் விமர்சனங்களை வைத்தார். இதனையடுத்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலில் ‘சில தலைவர்கள் மிதமிஞ்சிய பேச்சு பேசுகின்றனர் இது பிராந்திய அமைதிக்கு உகந்ததாக இல்லை’ என்று தெரிவித்ததாக பிரதமர் அலுவலக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ‘விமர்சனத்தை கொஞ்சம் எச்சரிக்கையுடன்’ செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் வெள்ளை மாளிகைத் தரப்பு செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழ்நிலைமைகளில் சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.