Published : 20 Aug 2019 10:50 AM
Last Updated : 20 Aug 2019 10:50 AM

ஜாகீர் நாயக் மதப் பிரச்சாரம் செய்ய மலேசியாவில் தடை 

கோலாலம்பூர்,

இந்துக்களுக்கும், சீனர்களுக்கும் எதிராக இன வேறுபாட்டைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரையடுத்து, முஸ்லிம் மதப் பிரச்சாரகர் ஜாகீர் நாயக் மலேசியா முழுவதும் மக்களிடையே பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராயல் மலேசியா போலீஸின் தலைமை செய்தித்தொடர்பாளர் தடுக் அஸ்மாவதி அகமது தேசத்தின் பாதுகாப்புக்காக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக மலாய் மெயில் நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜாகீர் நாயக் மீது இந்தியாவில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கும், என்ஐஏ தொடர்ந்துள்ள வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இதனால், மலேசியாவில் கடந்த 3 ஆண்டுகளாக ஜாகீர் நாயக் வாழ்ந்து வருகிறார். அந்த நாடு அவருக்கு நிரந்தரக் குடியுரிமையை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் ஜாகீர் நாயக் மதப் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் மலேசியாவில் வாழும் இந்துக்கள், சீனர்கள் குறித்தும், இன வேறுபாட்டைத் தூண்டும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஜாகீர் நாயக்கின் இந்தப் பேச்சுக்கு மலேசியாவில் பலதரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. இதனால், ஜாகீர் நாயக்கிற்கு பல்வேறு இக்கட்டான தருணங்களில் ஆதரவாக இருந்து வந்த பிரதமர் மாகாதிர் முகமது, தற்போது எந்தவிதமன கருத்தும் கூறாமல் மவுனம் காத்தார்.

மேலும், மலேசியாவில் மதப் பிரச்சாரங்களைத் தவிர்த்து அரசியல்ரீதியான பேச்சுகளைப் பேசாமல் விலகி இருக்குமாறு ஜாகீர் நாயக்கிற்கு பிரதமர் மகாதிர் முகமது அறிவுரை வழங்கி இருந்தார் எனச் செய்திகள் தெரிவித்தன.

இதைத் தொடர்நது, மலேசியாவில் உள்ள மலாகா, ஜோஹர், செலங்கார், பினாங்கு, கேடா, பெர்லிஸ், சராவக், பினாகு ஆகிய மாகாணங்கள் ஜாகீர் நாயக் மக்கள் மத்தியில் பேசுவதற்குத் தடை விதித்துள்ளன.

மலேசியாவின் முன்னாள் போலீஸ் தலைவர் ரஹிம் நூர், அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழலில் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கு எதிராக நாடு முழுவதும் 115 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், இரு குழுக்களுக்கு இடையே விரோதத்தைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று ஜாகீர் நாயக்கிடம் போலீஸார் ஏறக்குறைய 10 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மலேசியாவில் வாழும் இந்துக்கள், சீனர்களுக்கு எதிராகப் பேசியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து தேசத்தின் பாதுகாப்பு நலன் கருதி ஜாகீர் நாயக் மலேசியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசுவதற்குத் தடை விதிதத்து அந்நாட்டு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மலாய் மெயில் நாளேட்டுக்கு ராயல் மலேசியா போலீஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் தடுக் அஸ்மாவதி அகமது அளித்த பேட்டியில், "தேசத்தின் நலன் கருதியும், இன மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டும் ஜாகீர் நாயக் மலேசியா முழுவதும் மக்கள் மத்தியில் மதப் பிரச்சாரம் செய்யவும், பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகல்கள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.


ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x