Published : 19 Aug 2019 06:03 PM
Last Updated : 19 Aug 2019 06:03 PM

டெங்கு அபாயம்: ஒரே வாரத்தில் 12,000 பேர் வங்கதேச மருத்துவமனைகளில் அனுமதி

டாக்கா

வங்கதேசத்தில் டெங்கு நோய் வேகமாக பரவியதன் விளைவாக கடந்த வாரம் மட்டும் மருத்துவமனைகளில் 12 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வங்கதேசத்தில் பரவியுள்ள டெங்கு குறித்து டெய்லி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளதாவது:

''கடந்த ஒரு வாரத்தில், டாக்காவிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் தலைநகரில் இருந்ததை விட அதிகமான டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் தலைநகர் டாக்கா மருத்துவமனைகளில் 734 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 972 டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் டெங்கு நோய் வேகமாக பரவியதன் விளைவாக கடந்த வாரம் மட்டும் (ஆகஸ்ட் 12- ஆகஸ்ட் 18) மருத்துவமனைகளில் 12 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டாக்காவிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகள் குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. இதைச் சமாளிப்பதில் வங்கதேச அரசின் சுகாதாரத்துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

500 படுக்கைகள் கொண்ட ஃபரித்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இப்போது 751 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 277 பேர் டெங்கு நோயாளிகள் என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கமோடா புரோசாத் சஹா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''இந்த மருத்துவமனையில் தேவையான பணியாளர்களில் பாதிபேர்தான் உள்ளனர். தற்போது டெங்கு நோயாளிகளின் வருகை அவர்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது'' என்றார்.

தற்போதைய டெங்கு நோய் டாக்காவிலிருந்து தொடங்கியது. ஈத் விடுமுறையின் போது ஏராளமான மக்கள் தலைநகரிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு பயணித்ததால் வெளி மாவட்டங்களுக்கு வேகமாக பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்''.

இவ்வாறு டெய்லி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x