Published : 19 Aug 2019 02:48 PM
Last Updated : 19 Aug 2019 02:48 PM

எண்ணெய் கப்பலை மீண்டும் சிறைபிடிக்க முயற்சியா? - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்

தங்கள் நாட்டு கச்சா எண்ணெய் கப்பலை சிறைபிடிக்க மீண்டும் அமெரிக்கா முயன்றால் அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’ ஜூலை 4-ம் தேதி இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றபோது சிறைபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஈரானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கப்பலை விடுவிக்காவிட்டால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்தது. ஜிப்ரால்டர், ஸ்பெயின் கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ கண்காணிப்பில் உள்ள பகுதியாகும்.
இதையடுத்து பாரசீக வளைகுடா பகுதியில் ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்ற இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது. இதனால் ஈரான்-இங்கிலாந்து இடையிலான மோதல் மேலும் வலுத்தது.

இந்த விவகாரத்தை ஜிப்ரால்டர் அரசு கையாளும் என இங்கிலாந்து கூறியது.
இந்த நிலையில், ஈரான் கப்பலை விடுவிப்பதாக ஜிப்ரால்டர் அரசு நேற்று அறிவித்தது. ஆனால் இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அந்த கப்பல் ஜிப்ரால்டர் கடல் பகுதியை தாண்டி வெளியே வந்தால் அதனை சிறை பிடிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஈரான் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அப்பாஸ் மவுஸ்வி கூறுகையில் ‘‘எங்கள் நாட்டு கப்பலை சிறை பிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே நாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளோம்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x