Published : 19 Aug 2019 02:51 PM
Last Updated : 19 Aug 2019 02:51 PM

ஐ.எஸ்.தீவிரவாத முகாம்களை அழித்தே தீருவோம்: 63 பேர் பலிக்குப் பின் 100-வது சுதந்திர தினத்தில் ஆப்கன் அதிபர் சூளூரை 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி : கோப்புப்படம்

காபூல்,

எங்கள் மண்ணில் செயல்படும் அனைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகளையும், முகாம்களையும் அழித்தே தீருவோம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி சூளுரைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதி மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 63 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் துயரச் சம்பவத்துக்குப்பின் நாட்டின் 100-வது சுதந்திர தின விழா இன்று நடைபெற இருந்தது. அதை அந்நாட்டு அரசு ரத்து செய்துவிட்டது. இந்த சூழலில் அதிபர் அஸ்ரப் கானி ஆவேசத்துடனும், வேதனையுடனும் சூளுரைத்து மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்து வரும் நீண்டகாலப் போர் முடிந்து எப்போது அமைதி கிடைக்கும் என்று பூர்வீக ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் ஆதங்கத்தை சுதந்திர நாளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

காபூலில் நடந்த இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறும் தலிபான் அமைப்பினர், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே கண்டுபிடிக்கத் தவறிவிட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தலிபான்களில் மற்றொரு தரப்பினர், இன்னும் அமெரிக்கப் படைகள் இங்கு வசிக்கக்கூடாது, ஆப்கானிஸ்தான் மக்களிடமே விட்டுவிடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஏறக்குறைய அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான ஒரு ஆண்டாக நடந்த அமைதிப்பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த சூழலில்தான் சனிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் 100-வது சுதந்திர தினத்தில் ஆப்கன் அதிபர் அஸ்ரப் கானி மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

''தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் அமைதிப்பேச்சால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். இன்னும் ஆப்கன் அரசு அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய தளத்தை தலிபான் அமைத்துக் கொடுத்துவிட்டது. பள்ளிகள், மசூதிகள், பொது இடங்களில் அப்பாவி மக்களை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்வதற்கான தளத்தை தலிபான்கள்தான் ஏற்படுத்தினார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 32 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் 927 பேர் கொல்லப்பட்டனர். நிச்சயம் எங்கள் மக்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக எங்களின் போராட்டம் தொடரும்.

ஐ.எஸ், தீவிரவாத அமைப்பைப் பழிதீர்த்து, பூண்டோடு வேரறுப்போம். எங்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைத்து, உதவ வேண்டும்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் எல்லைப்பகுதிதான் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது. அவர்களின் புலனாய்வுப் பிரிவு நீண்டகாலமாக தலிபான்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

அமைதியை அதிகமாக விரும்பும் பாகிஸ்தான் மக்களிடம் நான் கேட்பது, ஐ.எஸ். தீவிரவாதிகள் புகலிடங்கள் எவை என்பதை அடையாளம் காட்டுங்கள்''.

இவ்வாறு அஸ்ரப் கானி தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x