Published : 19 Aug 2019 01:37 PM
Last Updated : 19 Aug 2019 01:37 PM

அமைதி முயற்சியை காஷ்மீருடன் ஒப்பிடுவது பொறுப்பற்ற பேச்சு: பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் 

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமைதி முயற்சியோடு, காஷ்மீர் விவகாரத்தை ஒப்பிட்டு பாகிஸ்தான் பேசி இருப்பது பொறுப்பற்ற பேச்சு. இது தேவையில்லாதது என்று பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் எழுப்பி ஆதாயம் தேட முயற்சிக்கும் பாகிஸ்தான் செயல்பாடுகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜித் கான் சமீபத்தில் பேசுகையில், காஷ்மீரில் தற்போதும் இருக்கும் பதற்றமான சூழலால் ஆப்கானிஸ்தான் நடக்கும் அமைதி முயற்சிகளைப் பாதிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சுக்கு ஆப்கானிஸ்தான் அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ரோயா ரஹ்மானி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசாத் மஜீத் கான், சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமைதி முயற்சியைப் பாதிக்கும் என்று பேசியுள்ளார். இதை ஆப்கானிஸ்தான் அரசு கண்டிக்கிறது. அது தொடர்பாக கேள்வியும் எழுப்புகிறது.

காஷ்மீரில் நிலவும் எந்த சூழலையும் ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சோடு முடிச்சு போட்டு, தொடர்புபடுத்தி பாகிஸ்தான் பேசுவது பொறுப்பற்ற பேச்சு, தேவையில்லாதது என்பதைக் காட்டுகிறது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் தொடர்புடையது. ஆனால், திட்டமிட்டே இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தானை முடிச்சு போடவும், தொடர்புபடுத்தவும் பாகிஸ்தான் நோக்கமாக வைத்துள்ளது. வேண்டுமென்றே இதுபோன்று செயல்களைச் செய்து, ஆப்கானிஸ்தான் மண்ணில் நீண்டகாலத்துக்கு வன்முறை நடக்க வேண்டும் என்று நினைக்கிறது.

தலிபான்களுக்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பாகிஸ்தான் மோசமான முறையில் சாக்குப் போக்குகளைக் கூறி வருகிறது.

ஆப்கானிஸ்தான் படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு மிரட்டல் இருக்கிறது என்று பாகிஸ்தான் தூதர் பேசியிருப்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. எங்களால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் அரசுதான் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைகளை மேற்கு எல்லையில் குவித்திருக்கிறது.

எங்களால் பாகிஸ்தானுக்கு எந்த ஸ்திரத்தன்மையும் பாதிக்கவில்லை. மாறாக, பாகிஸ்தான் நடவடிக்கையாலும், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாலும், எங்கள் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது.

தீவிரவாதக் குழுக்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் செயல்படுகின்றன. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பகுதிக்குள்ளும் ஊடுருவுகின்றன.

உண்மையான, நேர்மையான சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானுக்குள் நடக்கும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆப்கான் அதிபர் அஸ்ரப் கானி, பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் குவாமர் ஜாவித் பஜ்வா ஆகியோரிடையேயான நல்லுறவு பாகிஸ்தான் தூதரின் பொறுப்பற்ற பேச்சால் பாதித்துவிடும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x