

புச்சாரெஸ்ட் (ரோமானியா)
ருமேனியாவில், மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ரத்தம் செலுத்தும் ஸ்டேண்ட்டைக்கொண்டு கொடூரமாகத் தாக்கியதில் 4 பேர் பலியாகினர்; 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரோமானியா ஊடகங்கள் தெரிவித்ததாவது:
ருமேனிய தலைநகர் புச்சாரெஸ்டின் வடகிழக்குப் பகுதியான சபோக்காவில் உள்ள மனநல மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் 38 வயது மிக்க ஒரு நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதியின்போது இவருடன் வேறு யாரும் வரவில்லை.
இவர் திடீரென இன்று காலை சிகிச்சை அளிக்கும் அறைக்குள் நுழைந்தார். ரத்தம் செலுத்தும் ஸ்டேண்ட்டை கையில் எடுத்துக்கொண்டு நோயாளிகள் பலரையும் சரமாரியாகத் தாக்கினார். இதனால் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொருவர் சிகிச்சைக்காக கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலினால் இருவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டனர். தவிர, 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் வியோரிகா மிஹாலாஸ்கு தெரிவிக்கையில், ''இந்த நோயாளி சக நோயாளிகள் மீது நிகழ்த்திய தாக்குதல் எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்துமுடிந்துவிட்டன.
மற்ற நோயாளிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய இந்த நோயாளி ஒரு சாதாரண கண்காணிப்பு மட்டத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஒரு கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடும் அளவுக்கு சென்றுள்ள அவர் ஒரு மனநோயாளியாக அனுமதிக்கப்படும்போது தவிர்க்க முடியாத சோகம் என்று எந்த அறிகுறிகளும் அப்போது இல்லை'' என்றார்.