Published : 18 Aug 2019 11:26 AM
Last Updated : 18 Aug 2019 11:26 AM

ஆப்கானிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் உடல் சிதறி பலி; 182 பேர் படுகாயம்

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 63 பேர் கொல்லப்பட்டனர், 182-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் இதுதான் மிகமோசமான, பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க படைகளை குறைத்துக் கொண்டு, அங்கு அமைதி திரும்ப தலிபான்களுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நேற்று எட்டியநிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அமைதிப் பேச்சில் ஈடுபட்டு இருக்கும் தாங்கள் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தலிபான்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஷியா பிரிவினர் சார்பில் நடத்தப்பட்ட திருமணத்தில் இந்ததாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவினருக்கும், சன்னி பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. அந்த மோதலின் நீட்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் சன்னி பிரிவினர் என்பதால், அந்த அமைப்பின் சார்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

காபூல் நகரில் உள்ள ஷர் இ துபாய் எனச் சொல்லப்படும் துபாய் சிட்டி திருமண மண்டபத்தில் நேற்று இரவு ஷியா பிரிவினர் சார்பில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

அப்போது திருமணம் நடைபெறும் மேடையில் இசைக் கச்சேரியும், அதன் பக்கத்து அறையில் உணவுஅருந்தும் அறையும் இருந்தது. அப்போது, திடீரென காதைப் பிளக்கும் வகையில் மிகப்பயங்கர சத்தம் கேட்டதும், திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் காட்சி (படவிளக்கம்)

அப்போது உணவு அருந்தும் அறை, திருமண மண்டபம் எனப் பல்வேறு இடங்களில் மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. ஏறக்குறைய குண்டுவெடிப்பு நடந்து 2 மணிநேரத்துக்கு பின்புதான் அங்கு மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை போலீஸார் அறிந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்தசம்பவத்தை நேரில் பார்த்த திருமணவீட்டார் முகமது பராக் கூறுகையில், " நான் பெண்கள் குழுமியிருக்கும் அறையில் எனது உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஆண்கள் அமர்ந்திருந்த பகுதியில் மிகப்பயங்கர சத்தம் கேட்டது. உடனேஅங்கு சென்று பார்த்தபோது, ஏராளமானோர் தரையில் விழுந்து கிடந்தனர், எங்கும் ரத்தமும், சதையும் கிடந்தது.

மேலும், திருமண மேடையில்நின்றிருந்த ஏராளமான பெண்கள், குழுந்தைகள் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்தவுடன் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியே ஓடினோம். ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மண்டபத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது.

ஆண்கள் பிரிவில் இருந்தவர்கள் பெரும்பாலும் இறந்துவிட்டனர், உயிரோடு இருந்தவர்களும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் " எனத் தெரிவித்தார்.

ஆப்கான் மாநில உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஸ்ரதன் ரஹிமி கூறுகையில், " காபூல் திருமண மண்டபத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 63 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயமடைந்தனர் எனத் தெரியவந்தது. காயமடைந்தவர்கள் பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும்தான். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் 12-ம் தேதி ஆப்கானின் கிழக்குப்பகுதியில் நான்கார்ஹார் பகுதியில் திருமண வீட்டில் மனிதவெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நடத்தியது தெரியவந்தது.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x