Published : 18 Aug 2019 07:26 AM
Last Updated : 18 Aug 2019 07:26 AM

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம்; சர்வதேச பிரச்சினையாக மாற்ற முயன்ற பாகிஸ்தான், சீனாவுக்கு படுதோல்வி: தீர்மானம் ஏதுமின்றி முடிந்த ஐ.நா. ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவு அடைந்தது.

இதனால், காஷ்மீர் விவ காரத்தை சர்வதேச பிரச்சினையாக மாற்ற முயன்ற பாகிஸ்தானும், சீனாவும் தோல்வியை தழுவி யுள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவானது காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந் தது. இதனால், இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருந்த போதி லும், மத்திய அரசால் அம்மாநி லத்தை நேரடியாக கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியது. மேலும், காஷ்மீர் சட்டப்பேரவையின் அனுமதியின்றி, மத்திய அரசால் அம்மாநிலத்தில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலையும் இருந்து வந்தது.

இதற்கு முடிவுகட்டும் விதமாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம் தேதி அதிரடியாக நீக்கி யது. அதுமட்டுமின்றி, காஷ்மீர் மாநி லத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

பாகிஸ்தான் எதிர்ப்பு

இந்தியாவின் இந்த நடவடிக் கையை பாகிஸ்தான் கடுமை யாக எதிர்த்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் ஐ.நா. சபையில் இருக் கும்போது, இந்தியாவால் எவ்வாறு இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என அந்நாடு கேள்வியெழுப்பியது. ஆனால், காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்றும், இதில் கேள்வியெழுப்பு வதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் இந்தியா தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, காஷ் மீர் விவகாரம் தொடர்பாக ஆலோ சனை நடத்த வேண்டும் என ஐ.நா. சபையிடம் பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந் தது. ஆனால், அந்நாட்டின் கோரிக் கையை ஐ.நா. ஏற்கவில்லை.

சீனா நிர்பந்தம்

இதனால், இந்த விவகாரத்தில் சீனாவின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இதையடுத்து, வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள சீனாவின் நிர்பந்தத்தின்பேரில், ஐ.நா. பாது காப்பு கவுன்சிலானது காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் பங்கேற்றன. ஆனால், இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கிடைக்கவில்லை.

தனியறையில் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்ட மானது வழக்கமாக நடைபெறும் அரங்கில் நடத்தப்படாமல், மூடப் பட்ட தனி அறையில் வைத்து நடைபெற்றது.

இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் சீனாவை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரி வித்தன. ரஷ்யா, பிரிட்டன், அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகள் காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயானது என்றும், இதில் மூன்றாவது நாடோ அல்லது அமைப்போ தலையிடக் கூடாது எனவும் தெரிவித்தன.

பெரும்பான்மை ஆதரவு

பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு காரணமாக, இந்தியாவுக்கு எதிரான சீனாவின் வாதங்கள் இந்தக் கூட்டத்தில் எடுபடவில்லை. இதனால், எந்த வித தீர்மானமும், முடிவும் எட்டப் படாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன் சில் கூட்டம் நிறைவடைந்தது.

இது, சீனாவுக்கும் பாகிஸ் தானுக்கும் சர்வதேச அளவில் கிடைக்கப்பெற்ற தோல்வியாக கருதப்படுகிறது. ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகளை செய்தி யாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பினர். ஆனால், அவற்றுக்கு பதிலளிக்காமல் அவர் கள் அங்கிருந்து சென்றனர்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுடன் கைகுலுக்கிய ஐ.நா. இந்திய தூதர்

நியூயார்க்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நிறைவடைந்த பிறகு, அங்கிருந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுடன் ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் கைகுலுக்கியது அனைவரையும் கவர்ந்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு, சையது அக்பருதீன் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருப்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இது, தற்போது சர்வதேச தளத்திலும் நிரூபணமாகியுள்ளது" என்றார்.

இதையடுத்து, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்குமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

நாடுகள் தங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை பல்வேறு விதமாக அணுகலாம். அதற்கு பல ராஜாங்க ரீதியான வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், தீவிரவாதத்தை பயன்படுத்தி தங்களின் இலக்கை அடைந்துவிட முயற்சிப்பது தவறானது. ஒரு குறிப்பிட்ட நாட்டை தவிர (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) வேறு எந்த நாடும் அவ்வாறு செய்வதில்லை. தீவிரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருசேர பயணிக்க முடியாது. அதனை ஜனநாயகமும் அனுமதிக்காது என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தானுடன் இந்தியா எப்போது அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கும் என பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அப்போது, தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்ற சையது அக்பருதீன், அந்த பாகிஸ்தான் பத்திரிகையாளருடன் கைகுலுக்கினார். மேலும், அங்கிருந்த மற்ற 3 பாகிஸ்தான் நிருபர்களிடமும் அவர் கைகுலுக்கினார். பின்னர் தொடர்ந்து பேசிய சையது அக்பருதீன், "நாங்கள் இப்போதே தொடங்கிவிட்டோம். இனி உங்கள் தரப்பிலிருந்துதான் (பாகிஸ்தான்) பதில் வர வேண்டும்" என புன்முறுவலுடன் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட கசப்புணர்வு நிலவி கொண்டிருக்கும் இந்த சூழலில், சையது அக்பருதீனின் இந்த நடவடிக்கையை அனைவரும் வரவேற்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x