

வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக வாங்குவதற்கான ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க முயன்றபோது விற்பனைக்கல்ல என்ற பதிலை அந்நாட்டு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு. அட்லாண்டிக் கடலில் அமெரிக்காவுக்கு வடகிழக்கே சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இத்தீவு அமைந்துள்ளது.
பசுமையும் பனிப்படலங்களும் கனிம வளங்களும் நிறைந்து எழில்கொஞ்சும் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை வாங்குவதில் ட்ரம்ப் பலமுறை ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.
கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவது சாத்தியமா என்று ஆலோசகர்களை அவர் வினவியதாகவும் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு முயலும் ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் அனே லோன் பேக்கர் பதிலடி தந்துள்ளார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் அவர் தெரிவித்ததாவது: ''வணிகத்திற்காக இத்தீவு திறந்திருக்கிறது. ஆனால் விற்பனைக்கல்ல.'' வெளியுறவு அமைச்சககம் இந்த ட்வீட் செய்தியை மீண்டும் மீண்டும் பதிவேற்றியது.
ஆர்டிக்கின் கனிம வளங்களுக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கிரீன்லாந்து மீது கவனம் செலுத்தி வருகின்றன. வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கடந்த மே மாதம், ஆர்டிக்கில் ரஷ்யா மற்றும் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறினார்.
டேனிஷ் மக்கள் கட்சி விமர்சனம்
" ட்ரம்ப் உண்மையிலேயே இப்படியெல்லாம் சிந்திக்கிறாரென்றால், அவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்றுதான் அர்த்தம். அதற்கு இதுவே இறுதிச் சான்று. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் 50 ஆயிரம் பேரை அமெரிக்காவிற்கு விற்க வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் அபத்தமானது" என்று டேனிஷ் மக்கள் கட்சியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சோரன் எஸ்பர்சன் கூறினார்.
கோபன்ஹேகனுக்கு ட்ரம்ப் வருகை
தீவு தன்னாட்சி கொண்டது. ஆனால் பொருளாதார ஆதரவு, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றிற்காக டென்மார்க்கை நம்பியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்களைச் சந்திக்க அடுத்த மாதம் கோபன்ஹேகனுக்குச் செல்வதற்கு பல தொடர்பில்லாத
காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்நிலையில் கிரீன்லாந்து அரசும், எதிர்க்கட்சிகளும் தீவு விற்பனைக்கல்ல என, முன்கூட்டியே தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.