Published : 17 Aug 2019 11:55 AM
Last Updated : 17 Aug 2019 11:55 AM

காஷ்மீர் மக்களின் குரல் ஐ.நா.வில் எதிரொலித்தது: பாகிஸ்தான்

பூட்டப்பட்ட காஷ்மீர் மக்களின் குரல் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலித்தது என்று ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.

காஷ்மீரில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடந்த 4-ம் தேதியிலிருந்து இந்தியப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பின் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீருக்கு இந்தியா அளித்துள்ள சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது. சீனாவும் இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் கலந்துகொண்டன. இதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஆலோசனைக் கூட்டம் குறித்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி கூறும்போது, “காஷ்மீர் மக்களின் பூட்டப்பட்ட குரல் அவர்களது சொந்த நிலத்திலோ, சொந்த வீட்டிலோ கேட்கப்படாமல் இருக்கலாம். ஆனால் இன்று அவர்களின் குரல் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலித்தது. எங்களுடன் இணைந்து இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சீனாவுக்கு நன்றி.

காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை. அவர்களது வலி, துன்பம், மனரீதியாக எதிர்கொள்ளும் போராட்டம் போன்றவை இன்று ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலித்தது.

காஷ்மீரில் நிலவுவது மோசமான சூழ்நிலை. அங்கு இந்தியாவால் வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கலந்தாலோசிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது'' என்றார்.

கூட்டத்துக்குப் பிறகு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் செய்யது அக்பரூதீன் பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விஷயம். இதில் மற்ற நாடுகள் எதுவும் தலையிட வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x