Published : 17 Aug 2019 10:09 AM
Last Updated : 17 Aug 2019 10:09 AM

‘காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை’ - ட்ரம்ப் வலியுறுத்தல் 

வாஷிங்டன்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக முன்பு அறிவித்த நிலையில், தற்போது இந்தியாவின் எதிர்பால் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.

மேலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பேருந்து போக்குவரத்தையும் நிறுத்தியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகள் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.

இதனிடையே, காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று அதன் தலைவர் ஜோன்னா ரெனக்கா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி கடிதம் எழுதினார்.

இதன்பேரில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங் கிய இந்த ஆலோசனைக் கூட்டத் தில் சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் கலந்து கொண் டன. ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப் படவில்லை.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, காஷ்மீர் தொடர்பாக இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இம்ரான் கான் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அப்போது ட்ரம்ப், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த தகவலை வெள்ளை மாளிகையின் ஊடக பொறுப்பாளர் ஹோகன் கிட்லி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x