

இஸ்லாமாபாத்
காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து இந்திய திரைப்படங்கள் வெளியிட பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டதால் அந்நாட்டில் இந்திய திரைப்படங்களின் விசிடிகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதையடுத்து திருட்டு விசிடிக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.
மேலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பேருந்து போக்குவரத்தையும் நிறுத்தியது. பாகிஸ்தானில் உள்ள திரையரங்குகளில் இந்தி திரைப்படங்கள் உட்பட இந்திய திரைப்படங்கள் திரையிடவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையால் அங்கு இந்தி திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விசிடி கடைகளில் சோதனை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தகவல் தொடர்பு சிறப்பு அதிகாரி அஷிக் அவான் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பாகிஸ்தான் திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் இந்தி படங்கள் வெளியிட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இஸ்லாமாபாத் உட்பட பல நகரங்களில் இந்திய திரைப்படங்களின் விசிடிக்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து விசிடி கடைகளில் சோதனை நடத்தி அதனை பறிமுதல் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசுகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். விசிடி கடைகளில் போலீஸார் சோதனை நடத்துவார்கள்’’ எனக் கூறியுள்ளார்.