Published : 16 Aug 2019 12:49 PM
Last Updated : 16 Aug 2019 12:49 PM

வெடிக்காத இரண்டாம் உலகப் போர் குண்டு கிரெம்ளினில் கண்டுபிடிப்பு 

மாஸ்கோ

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இரண்டாம் உலகப் போரில் விமானத்திலிருந்து வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு கிரெம்ளின் மாளிகையின் மைதானத்தில் இவ்வளவு காலமாக வெடிக்காத நிலையில் இருந்ததை கிரெம்ளின் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய போர் ஆகும். இதில் உலகின் பல நாடுகள் பங்கேற்றாலும் ஐரோப்பிய நாடுகளே பெரும்பங்கு வகித்தன. முக்கியமாக ஜெர்மனியும் ரஷ்யாவும் இருவேறு மாபெரும் சக்திகளாக நின்று செயல்பட்டன.

அப்போது ஜெர்மன் போர் விமானங்கள் ரஷ்யாவை கைப்பற்ற குண்டுகளை வீசியது. இறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி ரஷ்யா வென்றது. கிரெம்ளின் தளபதி செர்ஜி க்ளெப்னிகோவ் ரியா நோவோஸ்டி ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:

"உங்களுக்குத் தெரியும், 1941-42க்கு இடைப்பட்ட காலத்தில் கிரெம்ளின் மீது குண்டு வீசப்பட்டது, கிரெம்ளின் மாளிகை மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்தப் பணிகளுக்கிடையில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்டு வெடிக்காத வெடிகுண்டு ஒன்றைக் காணமுடிந்தது.

விமானத்தில் இருந்து வீசப்பட்ட இந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் அப்படியே உள்ளது. இச் சம்பவத்தை அடுத்து வளாகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. கிரெம்ளின் மாளிகையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.''

இவ்வாறு கிரெம்ளின் தளபதி தெரிவித்தார்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ரஷ்ய அதிபரின் நிகழ்ச்சி நிரலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை'' என்றார்.

கிரெம்ளின் ஐரோப்பாவின் மிகப் பழமையான இடைக்கால கோட்டைகளில் ஒன்றாகும், இது ஜார், சோவியத் தலைவர்கள் மற்றும் தற்போது ரஷ்ய ஜனாதிபதி பயன்படுத்தும் மாளிகையாகவும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகவும் விளங்குகிறது.

வெடிகுண்டின் அளவு, தன்மை, எடை குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x