Published : 13 Aug 2019 01:51 PM
Last Updated : 13 Aug 2019 01:51 PM

காஷ்மீர் விஷயத்தில் நமது எதிர்ப்புகளுக்கு ஐ.நா. மாலை வைத்து வரவேற்கவில்லை: பாக். மக்களுக்கு வெளியுறவு அமைச்சர் குரேஷி அறிவுரை

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் நமது எதிர்ப்புகளுக்கு ஐ.நா. மாலை வைத்து வரவேற்கும் என எதிர்பார்க்காதீர்கள், பாகிஸ்தான் முட்டாள்களின் சொர்க்கத்தில் கண்டிப்பாக வாழக்கூடாது. என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது. மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது.

இதற்கிடையே பி-5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத் நகருக்கு ஈகைத் திருநாள் கொண்டாட்டத்துக்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி வந்துள்ளார்.

அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இன்னும் வாழக்கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு ஐ.நா.மாலை போட்டு வரவேற்கும் என்று மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். பி-5 நாடுகளில் எந்த நாடும் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கவில்லை.

முஸ்ஸிம் நாடுகள் கூட நம்முடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை, ஏராளமானோர் அங்கு முதலீடு செய்துள்ளதால், முஸ்லிம் சமூகம் அதிகமாக இருக்கும் முஸ்லிம் நாடுகள் கூட நமக்கு ஆதரவு அளிக்கவில்லை. உணர்ச்சிகளை எளிதாக வெளிப்படுத்தலாம், எளிதாக எதிர்ப்புத் தெரிவிக்கலாம், பிரச்சினையை புரிந்து கொண்டு, முன்னோக்கி நகர்ந்து செல்வதுதான் சிக்கலானது " எனத் தெரிவித்தார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x