Published : 13 Aug 2019 12:36 PM
Last Updated : 13 Aug 2019 12:36 PM

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் குறித்து அதிபர் ட்ரம்ப் இனி பேசமாட்டார்: இந்தியத் தூதர் உறுதி

வாஷிங்டன்,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இனிமேல் மத்தியஸ்தம் குறித்துப் பேசமாட்டார், ஆலோசிக்கவும் மாட்டார் என்று இந்தியத் தூதர் ஹர்ஸ வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த இரு வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அப்போது அவரிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யக் கோரி பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார் என்று தெரிவித்தார்.

ஆனால், அதிபர் ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை இந்திய அரசு மறுத்தது. அதுபோன்ற எந்தவிதமான கோரிக்கையையும் பிரதமர் மோடி, ட்ரம்ப்பிடம் வைக்கவில்லை.

காஷ்மீர் விவாகரத்தில் இந்தியா - பாகிஸ்தான் தவிர மூன்றாவது நபர், நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் ட்ரம்ப் பேச்சை வரவேற்றார்.

இதனிடையே 2-வது முறையாகவும் அதிபர் ட்ரம்ப் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி, இந்தியாவும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், விருப்பப்பட்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்வேன் என்று தெரிவித்தார். அப்போதும், இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் தொடர்பானது. இதில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் கோரக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் மாற்றியது.

இந்த விவகாரத்தில் கடந்த வாரம் கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்டாகஸ் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையிலானது என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இரு நாடுகளும் நேரடியாக அமைதிப் பேச்சின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறது. அமைதிப் பேச்சு நடத்த தேவையான சூழலுக்கு அமெரிக்க உதவத் தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இந்த சூழலில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஸ வர்த்தன் ஸ்ரீங்லா நேற்று ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் நீண்டகாலக் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் வேறுபாடுகளை மறந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுதான் அதன் கொள்கையாகும். இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதாக அதன் கொள்கையில் இல்லை.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில இந்தியாவும், பாகிஸ்தான் விரும்பிக் கேட்டுக்கொண்டால் மட்டுமே மத்தியஸ்தப் பேச்சில் ஈடுபடுவேன் என்பதில் அதிபர் ட்ரம்ப் தெளிவாக இருக்கிறார். ஆனால், மத்தியஸ்தம் விவகாரத்தில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்க மறுத்துவிட்டது. ஆதலால், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் குறித்து எந்தவிதமான பேச்சிலும் இனிமேல் அதிபர் ட்ரம்ப் ஈடுபடமாட்டார்.

அமெரிக்காவின் கொள்கையின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதிப் பேச்சில் ஈடுபடத் தூண்டுவது மட்டுமே. பிராந்தியத்தில் அமைதியான சூழல் ஏற்பட வழிவகுப்பதாகும். இதுதான் அமெரிக்காவின் நீண்டகால கொள்கை.

ஐநா சபை தலைவர் அன்டோனியோ கட்டர்ஸும் இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், சிம்லா ஒப்பந்தம், லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி அமைதிப் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும். மூன்றாவது நாடு, நபர் தலையீடு இருக்க கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமானவைதான். அது முன்னெச்சரிக்கையாகத்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்த முடிவு அறிந்தால், எல்லை தாண்டிய தீவிரவாதம் அதிகரிக்கக்கூடும், வன்முறை தூண்டிவிடக்கூடும் என்பதை அறிந்துதான் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இந்தப் பாதுகாப்பு கெடுபிடிகள்''.

இவ்வாறு ஹர்ஸ வர்தன் தெரிவி்த்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x