Published : 13 Aug 2019 11:01 AM
Last Updated : 13 Aug 2019 11:01 AM

காஷ்மீர் விவகாரம்; எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க எம்.பி: மன்னிப்பு கேட்க வைத்த இந்தியர்கள்

வாஷிங்டன்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக சாடிய அமெரிக்க எம்.பி. அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் கடும் எதிர்ப்பால் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை இரு பிரிவாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடானான நல்லெண்ண நடவடிக்கைகளை துண்டித்து வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் பல்வேறு நாடுகளிடமும் பாகிஸ்தான் ஆதரவு கோரி வருகிறது. எனினும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என அமெரிக்காவில் ஒரு சில எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பி. டாம் சியோஸி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில் ‘‘காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மோசமான விளைவுகள ஏற்படுத்தும். தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி அப்பாவி மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது முடியும். அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா கண்டிக்க வேண்டும்’’ என கூறி இருந்தார்.

டாம் எழுதிய கடிதத்துக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த டாம் சியோஸியை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் அறிக்கைகள் வெளியிட்டதுடன், சமூகவலை தளங்களிலும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

அமெரிக்க இந்திய பொது விவகார கமிட்டி தலைவர் ஜெகதீஷ் ஸ்வானி இதுபற்றி கூறுகையில் ‘‘காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம், இதில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. நாட்டின் நலன் கருதி முடிவுகள் எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் டாம் சியோஸி தலையிட்டது கண்டிக்கத்தக்கது’’ எனக் கூறியிருந்தார்.

டாம் சியோஸி வெற்றி நியூயார்க் டிவிஷன் 3 தொகுதியில் கணிசமான அளவு இந்தியர்கள் வசிக்கின்றனர். கடந்த தேர்தலில் அவர்கள் டாம் சியோஸிக்கு வாக்களித்து இருந்தனர். இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து டாம் சியோஸி வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார்.

அதில் ‘‘காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கலந்து பேசாமல் தனிச்சையாக நான் கடிதம் எழுதியது தவறு. இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தில் எனது எண்ணத்தை வெளிப்படுத்தவே கடிதம் எழுதினேன். அவ்வாறு கடிதம் எழுதும் முன்பாக அமெரிக்க வாழ் இந்தியர்களின் கருத்தை கேட்டிருந்தால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்காது’’ எனக் கூறிள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x