

சிரியாவில் அகதிகளாக தவித்து வரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் வேதனை குறித்து எந்த உலகத் தலைவரும் அக்கறை கொள்ளவில்லை என்று மலாலா தெரிவித்தார்.
சிரியாவின் அகதிகள் முகாமில் வாழும் குழந்தைகளுக்காக 'மலாலா ஃபண்ட்' என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பெறப்பட்ட நிதியில் சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் பள்ளி ஒன்று மலாலாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மலாலாவின் 18-வது பிறந்தநாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டதையொட்டி அந்தப் பள்ளியை மலாலா தொடங்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து லண்டனில் அவர் விடுத்த அறிக்கையில், "எனது 18-வது பிறந்த நாளில் சிரியாவில் வாழும் திறன் வாய்ந்த தைரியமிக்க குழந்தைகளுக்காக இந்தப் பள்ளியை அளிப்பதில் பெருமையடைகிறேன். ஆயுதப் போராட்டத்தால் சிரியாவில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் வகுப்புகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களோடு துணை நிற்பது நமது கடமை. ஆனால் நாம் அதனை செய்யத் தவறிவிட்டோம். உலக நாடுகளின் தலைவர்கள் யாரும் சிரியாவின் குழந்தைகள் மீது அக்கறைக் கொள்ளவில்லை. அவர்களின் அழுகுரல் எவரது காதுகளையும் எட்டவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகே பள்ளி முடித்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது கழுத்து மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்து மலாலா உயிருக்குப் போராடினார்.
ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காத நிலை மற்றும் தாலிபான்களின் தொடர் மிரட்டல்களை அடுத்து பாகிஸ்தான் அரசு மற்றும் இங்கிலாந்து அரசு உதவியோடு பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் நடந்தபோது மலாலாவின் வயது 15.