கேரள கார் ஓட்டுநருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.2 கோடி பரிசு: எஸ்எம்எஸ்ஸை அழித்துவிட்டதால் கடைசிநேரக் குழப்பம் 

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

அபு தாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவரும் கேரளாவைச் சேர்ந்தவருக்கு லாட்டரியில் ரூ.2 கோடி(10 லட்சம் திர்ஹாம்) பரிசு கிடைத்துள்ளது.

இதுகுறித்து தி கலீஜ் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம் ஷாநவாஸ். இவருக்குத் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து அபுதாயில் ஓட்டுநராகவும், கடந்த சில ஆண்டுகளாக ஒரு முதலாளியின் வீட்டில் கார் ஓட்டுநராகவும் ஷாநவாஸ் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அபுதாபியியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பிலும், தனியார் நிறுவனம் சார்பிலும் மால் மில்லியனர் பிரச்சாரமும், லாட்டரி சில்லறை விற்பனையும் நடந்தது.

இந்த லாட்டரி விற்பனையில் பங்கேற்ற ஷாநவாஸ் 200 திர்ஹாமுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன் லாட்டரிச் சீட்டு வாங்கினார். லாட்டரி வாங்கியபின் அவருக்கான உறுதி செய்யப்பட்ட எஸ்எம்எஸ் வந்தது. ஆனால், தனக்கெல்லாம் பரிசு கிடைக்குமா என்ற விரக்தியில் ஷாநவாஸ் லாட்டரி வாங்கியதற்கான எம்எஸ்எஸ்ஸை அழித்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி நடந்த லாட்டரி குலுக்கலில் ஷாநவாஸுக்கு முதல் பரிசாக 10 லட்சம் திர்ஹாம் கிடைத்தது. இது குறித்து நிறுவனம் சார்பில் ஷாநவாஸை அழைத்து தங்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதாகவும், தங்களுக்கு வந்த எஸ்எம்எஸ்ஸுடன் வந்து தங்களைச் சந்திக்கவும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஷாநவாஸ் தனது செல்போனில் தேடிப்பார்த்தபோது எஸ்எம்எஸ் இல்லை. அதை முன்பே அழித்துவிட்டது தெரியவந்தது. இதனால் பதற்றமடைந்த ஷாநவாஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் தெரிவித்தார். அதன்பின் அவர்கள், ஷாவாஸ் செல்போன் எண்ணையும், எம்எம்எஸ் வந்து சேர்ந்த விவரத்தையும் உறுதி செய்து அவருக்குப் பரிசை வழங்கினர்.

இதுகுறித்து அப்துல்சலாம் ஷாநவாஸ் கூறுகையில், "அபுதாபியில் கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து ஓட்டுநராக இருந்து வருகிறேன். ஆனால், என் சம்பாத்தியம் அனைத்தும் குடும்பத்துக்கே சரியாக இருந்தது, சேமிக்க முடியவில்லை. இதனால் நாட்டைவிட்டுச் செல்லும் போது வெறுங்கையோடுதான் போக வேண்டி இருக்குமா என்று கவலையோடு இருந்தேன். ஒரு வீட்டில் டிரைவராக இப்போது 2500 திர்ஹாம் சம்பளத்தில் பணியாற்றி வருகிறேன்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் மால் மில்லியனர் லாட்டரி வாங்கியதில் எனக்கு 10 லட்சம் திர்ஹாம் பரிசு கிடைத்துள்ளது என்று நிறுவனம் சார்பில் கூறியபோது என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் எனக்கு வந்த எஸ்எம்எஸ் குறித்துக் கேட்டபோது, நான் அதைத் தேடியபோது காணவில்லை. எஸ்எம்எஸ் இல்லாததை நினைத்து எனக்கு மாரடைப்பு வந்ததுபோல் இருந்தது. ஆனால், என்னுடைய செல்போன் எண், எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது ஆகியவற்றை உறுதி செய்து எனக்குப் பரிசு அளித்தனர்.

நான் இன்னும் எனது குடும்பத்தாரிடம் கூட இதுகுறித்துக் கூறவில்லை. என் மனைவியிடம் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று மட்டும் கூறினேன். இப்போது என்னுடைய மகள்களில் ஒருவருக்கு 7 வயதும், மற்றொருவருக்கு 14 வயதும் ஆகிறது.

அடுத்தகட்டமாக எனக்குக் கிடைத்த பணத்தை என் மகள்களுக்காகச் சேமிப்பேன். சிறிது இடம் வாங்கி, 2021-ம் ஆண்டுக்குள் சிறிய வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளேன். எனக்கு சரியான நேரத்தில் இந்தப் பணம் கிடைத்துள்ளது. இப்போது மழையால் என் மாநில மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக இறைவனிடம் பிரார்திப்பேன்" என ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in