

மியான்மரில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியாகினர். பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது இதன் காரணமாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மான் மாகாணத்தில் நடந்து வரும் மீட்புப் பணிகள் குறித்து உள்ளூர் அதிகாரிகள் ஒருவர் கூறும்போது, “ ப்யார் கோன் கிராமத்தில் நிலச்சரிவில் சுமார் 16 வீடுகள்பாதிக்கப்பட்டுள்ளது. 22 பேர் இந்த நிலச்சரிவில் பலியாகி உள்ளனர். 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100 பேர்வரை மாயமாகி உள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
நிலச்சரிவினால் பாதிக்கபட்ட ஹிடா என்ற பெண் கூறும்போது, “மிகப் பெரிய சத்தம் கேட்டது. எனது வீட்டை மண் சூழ்ந்துவிட்டது. என்னுடைய உறவினர்கள் பலரை காணவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
மியான்மரில் பெருகெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக மான் மற்றும் பகோ மாகாணத்தில் 30,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்தில் மட்டும் வெள்ளப் பெருக்கு காரணமாக 89,000 மக்கள் தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.