‘நோரா... நோரா எங்கிருக்கிறாய் நான் தான் அம்மா...’- காணாமல் போன சிறுமியைத் தேட காட்டில் அலறும் தாயாரின் குரல்

‘நோரா... நோரா எங்கிருக்கிறாய் நான் தான் அம்மா...’- காணாமல் போன சிறுமியைத் தேட காட்டில் அலறும் தாயாரின் குரல்
Updated on
1 min read

மலேசியாவில் ரிசார்ட் ஒன்றிலிருந்து 15 வயது சிறுமி நோரா 6 நாட்களுக்கு முன்னதாக திடீரென காணாமல் போனார், அவரைத் தேடும் பணி பல்வேறு தளங்களிலும் முடுக்கி விடப்பட்ட நிலையில் மலேசிய மீட்புக் குழுவினர் மலைக்காட்டுப் பகுதியில் புதிய முயற்சியாக சிறுமியின் தாயாரின் குரலைப் பதிவு செய்து காட்டில் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டபடி தேடுதல் வேட்டையைத் தொடர்ந்துள்ளனர்.

அயர்லாந்து-பிரெஞ்ச் தம்பதியான மீப்-செபாஸ்டியன் தம்பதியின் குழந்தைதான் இந்த நோரா கோய்ரின். இவர்கள் லண்டனில் 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு சற்று தொலைவில் அடர்ந்த வனப்பகுதியருகே உள்ள சுற்றுலா ரிசார்ட்டுக்கு வந்து தங்கினர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நோரா காணாமல் போனதைக் கண்டு குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு புகார் அளித்தனர். நோரா ஜன்னலில் ஏறி அது வழியாக வெளியில் சென்றிருக்கலாம், வழிதெரியாமல் எங்காவது தவித்துக் கொண்டிருக்கலாம் என்று கருதும் போலீஸார் குற்றம் எதுவும் நிகழ்ந்திருக்கும் வாய்ப்பு பற்றி இதுவரை ஐயம் கொள்ளவில்லை.

ஆனால் நோராவுக்கு கற்றல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள் இருப்பதால் அவர் தானாகவே காணாமல் போக வாய்ப்பில்லை, அவர் கடத்தப்பட்டிருக்கிறார் என்று நோரா குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

இந்தத் தேடுதல் வேட்டையில் சுமார் 260 பேர் ஈடுபட்டுள்ளனர். வான்வழித் தேடுதல், மோப்ப நாய்கள், அந்தப் பகுதியை நன்கு அறிந்த பூர்வக்குடியினர் என்று அனைவரும் தேடல் வேட்டையில் ஈடுபட்டும் பயனில்லாமல் போயுள்ளது. விசாரணையாளர்கள் இதுவரை 20 பேரை விசாரித்துள்ளனர், தடயவியல் நிபுணர்கள் ரிசார்ட்டின் கைரேகப் பதிவு, கால்தடங்களின் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய முயற்சியாக நோராவின் தாயர் குரலை ரெக்கார்ட் செய்து அதை ஸ்பீக்கரில் ஒலிபரப்பி தேடி வருகின்றனர். அதில், “நோரா டார்லிங், நோரா, நோரா ஐ லவ் யு, உன் அம்மாதான் கூப்பிடுகிறேன்” என்று ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.

நோராவின் தாத்தா அவரைப் பற்றி கூறும்போது, ‘நோரா மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள், தனியாக எங்கும் செல்ல மாட்டாள், ஆகவே சாகசத்துக்காக அவர் தனியாகச் சென்றிருக்கலாம் என்ற போலீசாரின் கணிப்புக்கு இடமில்லை’ என்கிறார்.

-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in