Published : 09 Aug 2019 01:26 PM
Last Updated : 09 Aug 2019 01:26 PM

''இந்தியாவுக்கு நோ சொல்லுங்கள்'' - இந்திய சினிமா, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தானில் தடை 

இஸ்லாமாபாத்

சினிமா உள்ளிட்ட அனைத்து வகையான திரைப்படம் சார்ந்த கூட்டு முயற்சிகளுக்கும் இந்தியாவுடனான அனைத்து கலாச்சார பரிமாற்றங்களுக்கும் தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே, 'இந்தியாவுக்கு நோ சொல்லுங்கள்' என்ற தேசிய முழக்கத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளதாக டான் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில், (கடந்த திங்கள் அன்று) ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற இந்தியா 370-வது பிரிவை ரத்து செய்தது. இப்பகுதியை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை 'ஒருதலைப்பட்சமானது' மற்றும் 'சட்டவிரோதமானது' என்று பாகிஸ்தான் கூறியதுடன், இந்த விஷயத்தை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் செல்லும் என்று கூறியது. தொடர்ந்து வர்த்தக உறவுகளை முறித்துக்கொண்டதோடு இந்தியாவுக்கான தனது தூதரையும் அழைத்துக்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று, திரைப்படம் உள்ளிட்ட அனைத்து வகையான இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய டிடிஎச் உபகரணங்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையமான பெம்ரா அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஃபிர்தவஸ் ஆஷிக் அவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

''பாகிஸ்தானில் இந்தியாவின் கலாச்சாரப் பரிமாற்றம் என்பது ஒரு மோசடியாகும். இங்கு வெளியாகும் இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தான் இளைஞர்களின் மனதை மாசுபடுத்துகிறது.

இதற்காகவென்றே பாகிஸ்தானிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், 'இந்தியாவுக்கு நோ சொல்லுங்கள்' என்ற தேசிய முழக்கம் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. ஒரு குழுவை நிறுவ தேசியப் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்மூலம் அனைத்து முனைகளிலிருந்தும் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு எதிராக பாகிஸ்தான் போராடும்.

இந்திய கலாச்சார நடவடிக்கைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றை, தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும் எதிர்த்துப் போராட வலியுறுத்தும் ஒரு சட்டரீதியான குழுவாக இக்குழு செயல்படும்.

வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்குள் வரும் தகவல் தொடர்புகள் அனைத்தும் தகவல் அமைச்சகம், வெளியுறவு அலுவலகம் மற்றும் மக்கள் தொடர்பு (ஐஎஸ்பிஆர்) சேவைப்பிரிவு ஆகியவற்றால் தகவல்களின் தன்மைக்கு ஏற்ப கையாளப்படும்.

பாகிஸ்தானிய கலாச்சார மற்றும் சமூக விழுமியங்களுக்கும் இந்தியத் திரைப்படங்களுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தவிர்க்க முடியாதது. இந்தியாவின் கலாச்சாரப் படையெடுப்பை தடுத்து நிறுத்த முன்னணியில் நிற்கவேண்டியது ஊடகங்களின் கடமையாகும்.

பாகிஸ்தானின் அனைத்துத் திரையரங்குகளிலும் இந்தியத் திரைப்படங்களைத் திரையிட அரசாங்கம் தடை விதித்துள்ளது''.

இவ்வாறு பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஃபிர்தவஸ் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில், "பாகிஸ்தானின் எந்த தியேட்டரிலும் எந்த இந்தியப் படமும் திரையிடப்படாது. நாடகம், திரைப்படங்கள் மற்றும் இந்த வகையான இந்திய உள்ளடக்கம் எதனையும் பாகிஸ்தானில் முற்றிலும் தடை செய்யப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.

இது முதல் முறை அல்ல

இரு நாடுகளுக்கும் இடையில் எப்போதெல்லாம் பதற்றம் உருவாகிறதோ அப்போதெல்லாம் முதலில் திரைப்படங்கள் மற்றும் கலாச்சார உறவுகள் தான் பாதிக்கப்படுகின்றன. பாகிஸ்தான் இந்திய திரைப் படங்களுக்கு தடை விதித்தது இது முதல் முறையல்ல.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் இதேபோன்ற முடிவை எடுத்தது. புல்வாமாவில் துணை ராணுவப்படை சென்ற வேன்கள்மீது மீது பிப்ரவரி 14 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தி திரைப்படத் துறையும் இதேபோன்ற நடவடிக்கையை அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x