

சர்வதேச நாணய நிதியத்திடன் தவணையை செலுத்த கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் கேட்டு கிரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐ.எம்.எப்-க்கு அளிக்க வேண்டிய கடன் தவணையை கிரீஸ் செலுத்தாத நிலையில் அந்த நாடு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப் அமைப்புக்கு அளிக்க வேண்டிய 1.6 பில்லியன் யூரோ தவணைத் தொகையை செலுத்த தவறியது கிரீஸ். இதனை உடனடியாக செலுத்த முடியாத நிலையில், தற்போது கிரீஸ் நாட்டு அமைச்சர்கள், ஐ.எம்.எப் அமைப்பின் கடன் தொகையைச் செலுத்தக் கூடுதலாக 2 ஆண்டுகள் கால அவகாசம் கோரி பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் கைவிரிப்பு:
முன்னதாக நேற்று புதிய கடன் வழங்க கோரி ஐரோப்பிய யூனியனிடம் கிரீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு ஐரோப்பிய யூனியன் மறுப்பு தெரிவித்த நிலையில் இறுதி கட்ட முயற்சியும் பலனளிக்காமல் போனது.
இதனை அடுத்து, 1.6 பில்லியன் யூரோ தவணையை செலுத்த கிரீஸ் தவறியதை ஐ.எம்.எப்-க்கு நேற்று நள்ளிரவு உறுதி செய்தது.
நிதி நெருக்கடியால் கிரீஸில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நேற்று முதல் மூடப்படடுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த நிலையே தொடரும் என்று அந்நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் அறிவித்திருந்தார்.
இதனால் அந்நாட்டுகள் மக்கள் உடனடியாக வங்கிகள் மற்றும் சந்தையில் இருக்கும் முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைக் குறைக்க இது வழிவகுத்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
வங்கிகள் மூடப்பட்டதால் கிரீசில் ஏ.டி.எம். உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்து முடங்கியுள்ளன.
லண்டனில் போராட்டம்
கிரீஸ் நாட்டு கடனை கைவிடக் கோரி லண்டனில் ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது நூற்றுக்கணக்கானோர் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் கிரீஸ் நாட்டு இடதுசாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தங்களது தாய் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி குறித்து தங்களது கவலையைத் தெரிவித்தனர்.