Published : 08 Aug 2019 05:09 PM
Last Updated : 08 Aug 2019 05:09 PM

காஷ்மீர் உங்கள் உள்நாட்டு விவகாரம் அல்ல, அதை ஐ.நா. தீர்மானிக்கும்: இந்தியாவின் கூற்றை நிராகரித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு கூறியதை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் உங்கள் உள்நாட்டு விவகாரம் அல்ல. அதை ஐ.நா.தான் தீர்மானிக்கும். காஷ்மீரை உலகிலேயே மிகப்பெரிய சிறையாக மாற்றிவிட்டீர்கள் என்று காட்டமாகப் பதில் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்தியத் தூதரை திருப்பி அனுப்பியும், வர்த்தக உறவை ரத்து செய்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு பதிலடி கொடுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ''ஜம்மு காஷ்மீர் என்பது உள்நாட்டு விவகாரம். அதில் தலையிடாதீர்கள். வர்த்தக உறவு ரத்து, தூதரை திரும்பப் பெறுவது போன்ற செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யுங்கள். இந்த பிராந்தியத்தில் நீங்கள் செய்யும் செயல் அபாயகரமான தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது'' என்று அறிவுரை கூறியிருந்தது.

இதற்கு பதில் அளித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் இன்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ஜம்மு காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா கூறியதை பாகிஸ்தான் நேரடியாகவே மறுக்கிறது. இன்னும் காஷ்மீர் விவகாரம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருக்கிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து இறுதி முடிவை ஐ.நா.வின் பொதுவாக்கெடுப்புதான் முடிவு செய்யும்.

இந்தியா நிர்வாகம் செய்யும் காஷ்மீர் பகுதியில் என்ன மாதிரியான அட்டூழியங்கள் நடக்கிறது என்று குறிப்பிட்டு எங்கள் எதிர்ப்புக் கடிதத்தை இந்தியாவின் தூதர் அஜய் பசாரியாவிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஷோஹைல் முகமது அளித்தார்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு உரிமைகள் ரத்து செய்யும் முன் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் கவலையளிக்கின்றன. காஷ்மீர் பகுதிகளை மூடியது, கூடுதலாக 1.80 லட்சம் படைகளைக் குவித்தது, தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது, மொபைல் சேவைகளை முடக்கியது போன்றவை கவலை அளிக்கின்றன. சர்வதேச சட்டங்களை மீறிய இச்செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

காஷ்மீர் மாநிலத்தை உலகிலேயே மிகப்பெரிய சிறையாக இந்தியா மாற்றிவிட்டது. 9 லட்சம் படைகளைக் குவித்து, 1.40 கோடி மக்களை அவர்களின் வீட்டுக்குள்ளே சிறை வைத்துள்ளது இந்திய அரசு. அங்கு தொடர்ந்து மனிதநேயப் பிரச்சினைகள் எழுகின்றன. மக்கள் உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்கி்றார்கள்.

அடிப்படை வசதிகளும் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. சர்வதேச சமூகம் இந்த நிகழ்வுகளைக் கண்காணிப்பது அவசியம். காஷ்மீர் மக்களின் சட்டப்பூர்வ சுய உரிமைக்காகவும், சுயாட்சிக்காகவும் பாகிஸ்தான் தொடர்ந்து ராஜாங்கரீதியிலும், தார்மீக ஆதரவையும் அளிக்கும்''.

இவ்வாறு முகமது பைசல் தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x