

லாகூர்,
லாகூரில் சிறையில் இருக்கும் தனது தந்தை நவாஸ் ஷெரீப்பை சந்திக்க வந்த அவரின் மகள் மரியம் நவாஸை பாகிஸ்தானின் ஊழல் தடுப்புப் பிரிவு திடீரென கைது செய்து அழைத்துச் சென்றது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மரியம் நவாஸைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு அமைப்பான என்.ஏ.பி. தெரிவித்துள்ளது.
பானமா பேப்பர்ஸ் கசிந்ததில் முன்னாள் பிரதமரா நவாஸ் ஷெரப் மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து நவாஸ் ஷெரீப் லாகூர் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் மீது சவுத்ரி சர்க்கரை ஆலைக்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்தது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஆகிய பிரிவின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவு ஏற்கெனவே வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில் இருக்கும் தனது தந்தை நவாஸ் ஷெரீப்பை சந்திக்க மரியம் நவாஸ் இன்று சிறைக்குச் சென்றார். அப்போது அவரை சிறை வாசலில் மறித்த ஊழல் தடுப்பு அமைப்பு பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் ஒரு சில கேள்விகள் அடங்கிய காகிதத்தைக் கொடுத்து அதில் பதில் அளிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். அதில் மரியம் நவாஸ் அளித்த பதிலுக்கும், விசாரணையில் அளித்த பதிலுக்கும் முரண்பட்டு இருந்ததால், அவரைக் கைது செய்வதாக ஊழல் தடுப்புப் பிரிவு அறிவித்தது.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த மாதம் 31-ம் தேதி மரியம் நவாஸ், சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த பதிலுக்கும், இன்று நாங்கள் சில கேள்விகள் கேட்டு அவர் அளித்த பதிலுக்கும் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததால், அவரைக் கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ