

இஸ்லாமாபாத்
காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த ரயில் வாகா எல்லையில் நிறுத்தப்பட்டதால் 3 மணிநேரம் பயணிகள் தவித்தனர்.
அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், தேசியப் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லியிலிருந்து தூதரை திரும்ப அழைக்கவும், தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இருதரப்பு நல்லுறவுகளை பாதிக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவுடனான உறவை துண்டிக்கும் வகையில் மேலும் சில நடவடிக்கைககள் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்படும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அறிவித்துள்ளார்.
இதனிடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் வாகா எல்லையில் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாது என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வாகா எல்லையில் 3 மணிநேரம் ரயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இந்திய ரயில்வே குழுவினர் ரயிலை அங்கிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இந்திய பகுதிக்குள் கொண்டு வந்தனர்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவை பின்னர் கடந்த 1994-ம் ஆண்டு முதல் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் இருந்து லாகூர் வரை இயக்கப்பட்டு வந்தது. இதுபோலவே புல்வாமா தாக்குதலுக்கு பிறகும் இந்த ரயில் போககுவரத்து இடைக்காலமாக நிறுத்தப்பட்டு இருந்தது.